

கோவையில், வெள்ளை காகிதக் கட்டுகளை பையில் வைத்து பூட்டி, ரூ.50 லட்சம் கொடுப்பது போல் நடித்து பறித்த 12 பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தர்ஷனும்(23), சுங்கத்தை சேர்ந்த ராகுல்குமாரும்(23) சாய்பாபாகாலனியில் தொழில் நிறுவனம் நடத்திவருகின்றனர். இவர்கள், கடந்த 14-ம் தேதி இரவு திருப்பூரை சேர்ந்த பிரபாகரனிடம் ரூ.30 லட்சம் ரொக்கம், ரூ.20 லட்சத்துக்கான காசோலை அடங்கிய கைப்பையை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்தனர்.
கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, மர்ம நபர்கள் இவரது வாகனத்தை இடித்து, ராகுல்குமாரை கத்தியால் வெட்டி, ரூ.50 லட்சம் தொகை இருந்த பேக்கை பறித்துச் சென்றனர்.
இதில் தொடர்புடையவர்களை பிடிக்க கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இக்குழுவினர் விசாரணை நடத்தி, திருப்பூரை சேர்ந்த பிரபாகரன், சரத்பாண்டி, மணிகண்டன், பாபு, செளபர் சாதிக், கிருபாகரன், வெண்டிமுத்து, சேதுராஜன், பிரவின், பவுல் என்ற மணிகண்டன் மற்றும் விபத்து ஏற்படுத்திய தமிழரசன், சிவராஜ் ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ சினிமா படத் தயாரிப்பாளர் என கூறிக்கொள்ளும் பிரபாகரன் ரூ.30 லட்சம் ரொக்கம், ரூ.20 லட்சத்துக் கான காசோலை என ரூ.50 லட்சம் இருப்பதாக கூறி, ராகுல்குமாரிடம் பேக்கை கொடுத்துள்ளார்.
அந்த கைப்பையை பூட்டிவிட்டு, ‘சாய்பாபாகாலனி அலுவலகத்துக்கு சென்ற பின்னர், எனது உதவியாளர் வந்து திறந்து காட்டுவார்’ என பிரபாகரன் கூறியுள்ளார். அதை நம்பி ராகுல்குமாரும் கைப்பையை வாங்கிக்கொண்டு கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.
பின்னர், பிரபாகரன் தனக்கு தெரிந்த ஆட்களை ஏற்பாடு செய்து, ராகுல்குமாரிடம் கொடுத்த பையை திட்டமிட்டு பறித்துள்ளார். ஏனெனில், அந்த பையில் அசல் ரூபாய் நோட்டுகளுக்கு பதில் வெள்ளை காகிதத் தாள்களை வைத்து பிரபாகரன் கொடுத்துள்ளார். அதை ராகுல்குமார் திறந்து பார்த்தால் சிக்கலாகிவிடும். இதனால் கடன் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, வழியிலேயே பறித்துக் கொண்டால், ராகுல்குமாரிடம் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு மிரட்டலாம் என பிரபாகரன் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 12 பேரும் கைது செய்யப்பட்டனர்’’ என்றனர்.பிரபாகரன் தனக்கு தெரிந்த ஆட்களை ஏற்பாடு செய்து, ராகுல்குமாரிடம் கொடுத்த பையை திட்டமிட்டு பறித்துள்ளார்.