

திருச்சி
திருச்சி நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் எத்தனை நாட்கள் கொள்ளையடிக்க எடுத்துக்கொண்டார்கள் என்பது குறித்து காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு 3 பேர் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
சிசிடிவி காட்சியில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் குறித்த காட்சிப்பதிவு சிக்கியது. கொள்ளையர்கள் குறித்த எவ்விதத் துப்பும் கிடைக்காமல் போலீஸார் தடுமாறி வந்த நிலையில் திருவாரூரில் வாகனச் சோதனையில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவரிடம் நான்கரை கிலோ தங்க, வைர நகைகள் இருந்தன. அவை லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
கொள்ளையடித்தது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் எனத் தெரியவந்தது. தென் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றிய முருகனை தென் மாநிலங்களில் போலீஸார் தேடிவந்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளி சுரேஷ் பின்னர் சரணடைந்தார்.
பிடி இறுகுவதை அடுத்து முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து போலீஸ் அவரைக் காவலில் எடுத்து விசாரித்தது. முருகன் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூரில் காட்டுப்பகுதிக்குள் புதைத்து வைத்திருந்த 12.5 கிலோ தங்கம் மற்றும் அரை கிலோ வைர நகைகளை பெங்களூரு போலீஸார் தோண்டி எடுத்தனர்.
பின்னர் அவற்றைக் காட்சிக்கு வைத்தனர். விரைவில் திருச்சி போலீஸார், கர்நாடக போலீஸாரிடமிருந்து முறைப்படி ஆவணங்களை அளித்து நகைகளை வாங்க உள்ளனர். லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன நகைகளில் 90 சதவீதத்திற்கும் மேலான நகைகள் மீட்கப்பட்டு பெரும்பாலான கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி நகைக்கடை கொள்ளை குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியதாவது:
“திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பிடிபட்டுள்ளனர். திருச்சி நகைக்கடை கட்டிடத்தை 2 அல்லது 3 முறை நோட்டமிட்டுள்ளனர். துளை போட்டதை ஒரே நாளில் செய்யவில்லை. சுவரை 4 அல்லது 5 நாட்களாகத் துளையிட்டு பின்னர் உள்ளே புகுந்து கொள்ளையடித்துள்ளனர். ஒரே நாளில் அவர்கள் துளையிடவில்லை. இதற்குக் காரணம் நகைக்கடையின் முன்புறம் காவலாளிகள் இருப்பதும், பின்புறம் பயன்பாடின்றி பள்ளி வளாகம் இருந்ததும் அவர்களுக்கு வசதியாகிவிட்டது.
முருகனை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதில் நமக்கு எதுவும் சிக்கல் இல்லை. கர்நாடக போலீஸ் விசாரணை முடித்த பின்னர், நாம் காவலில் எடுக்கக் கேட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் முறையாக மனு கொடுத்துள்ளோம். அவர்கள் விசாரணை முடிந்த பின்னர் நாம் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
கொள்ளையர்கள் வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது குறித்து முழுமையான தகவல்கள், மீதி நகைகள் எங்குள்ளன என்பது குறித்து முருகனைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது தெரியவரும். பிடிபட்ட சிலரிடம் நடத்திய விசாரணையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் மேலும் சில வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகத் கூறியுள்ளனர்.
பெங்களூர் போலீஸார் சட்டவிரோதமாக இங்கு வந்து நகைகளைத் தோண்டி எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் முறைப்படி அவர்கள் விசாரணை அடிப்படையில் நடந்துள்ளனர். எங்களுக்கும் கர்நாடக போலீஸுக்கும் நல்ல நட்பு ரீதியான ஒத்துழைப்பு உள்ளது. இதற்கு முன்னர்கூட அங்கு 15 நாட்கள் எங்கள் ஆட்கள் தங்கி விசாரணை நடத்தியபோது கர்நாடக போலீஸார் மெஸ்ஸில்தான் தங்கி விசாரணை நடத்தினர்.
திருட்டுப்போன நகைகள் 100 சதவீதம் மீட்கப்படவில்லை. முருகனை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் மற்ற நகைகள் மீட்கப்படும்”.
இவ்வாறு காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.