

சென்னை
வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக 5 பெண்கள் உள்பட 12 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பொது மக்களை போனில் தொடர்பு கொண்ட இளம் பெண்கள் சிலர் குறைந்த வட்டியில் பல்வேறு வகையான கடன்களை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சென்னை காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் அழைப்பு வந்த செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து விசாரித்தனர்.
இதில், சென்னை சிட்லப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இளம் பெண்கள் சிலரை பணியில் அமர்த்தி போலியாக கால்சென்டர் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் அங்கு நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டிருந்த 5 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், பசுமலைத்தாங்கலைச் சேர்ந்த மணிகண்டன், தாம்பரம் அடுத்த நத்தம்
தளம்பூரைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் முத்துராஜ், சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த சிலம்பரசன், காஞ்சிபுரம்
மாவட்டம் மேட்டுத் தண்டலத்தைச் சேர்ந்த சர்மிளா, சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், பள்ளிக்
கரணையைச் சேர்ந்த ஆகாஷ், திருவான்மியூரைச் சேர்ந்த ஆர்.வித்யாசாகர், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜீவரத்தினம், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா என தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 12 பேரையும் சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பல் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி பொது மக்களின் வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை பெற்று அதன் மூலம் பல கோடி ரூபாயை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பொதுமக்களை போனில் தொடர்பு கொள்ள இனிமையாக பேசும் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் இதுவரை 1500-க்கும் மேற்பட்டவர்களிடம் இதேபோல் பேசி மோசடி செய்துள்ளனர்.
இவர்கள் சேகரித்து கொடுக்கும் விவரங்களை திருப்போரூரைச் சேர்ந்த சர்மிளா (32) என்பவர் பெற்று வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டியுள்ளார். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மணிகண்டன் ஏற்கெனவே இதேபோல் மோசடி கும்பலிடம் வேலை செய்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது ஆட்களை பணிக்கு அமர்ந்தி மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். மோசடி தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மட்டும் சுமார் 100 பேர் புகார் அளித்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.