திண்டுக்கல்லில் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர்
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் சலூன் கடையில் முடிதிருத்தம் செய்ய வந்த இளைஞர் திடீரென மயங்கிவிழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் சலூன்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு முடிதிருத்தம் செய்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
முடிவெட்டிக் கொண்டிருந்தபோது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் சரவணன் இளைஞரை எழுப்ப முயற்சித்துள்ளார்.
முயற்சி பலனளிக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறினர்.
தகவல் அறிந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் அஞ்சுகம் காலனியைச் சேர்ந்த வினோத் என்பதும், சிதம்பரத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
திருமணத்துக்கு பெண் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இளைஞர் வினோத் மாரடைப்பால் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
