

திருப்பூர்
வெள்ளக்கோவில் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தக் கொலை குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
கரூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவரது மனைவி வசந்தாமணி (45). தம்பதியர் மகன் பாஸ்கரனுக்கு வரும் 1-ம் தேதி திருமணம் வைத்துள்ளனர். இதையொட்டி உறவினர்களை திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சேனாதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்டகுமாரவலசு கிராமத்தில் செல்வராஜின் அக்கா கண்ணத்தாள்(51) என்பவரை அழைக்க கடந்த 10-ம் தேதி கரூரில் இருந்து தம்பதியர் காரில் வந்துள்ளனர்.
உறவினரை அழைக்க கடந்த 10-ம் தேதி கரூரில் இருந்து தம்பதியர் காரில் வந்துள்ளனர். ஆனால், தம்பதியர் இருவரும் 11-ம் தேதி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த தம்பதியரின் மகன், கரூர் மாவட்டம் தாந்தோனி போலீஸ் நிலையத்தில் பெற்றோரைக் காணவில்லை என புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுக்காளியூர் பகுதியில் மர்மமான முறையில் கார் ஒன்று வெகுநேரமாக நிற்பதாகக் கூறி போலீஸாருக்குப் பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அது தம்பதியர் சென்றிருந்த கார் எனத் தெரியவந்தது. இந்நிலையில் தந்தோனி போலீஸார் தனிப்படை அமைத்து அங்கு சென்று போலீஸார் விசாரித்தனர். காரில் தம்பதியர் இல்லை. திருமண அழைப்பிதழ்கள் மட்டும் இருந்தன.
இதையடுத்து தம்பதியரின் அலைபேசி எங்கு அணைத்து வைக்கப்பட்டது என்பதைக் கொண்டு போலீஸார் விசாரித்தனர். அப்போது வெள்ளக்கோவில் அருகே செல்வராஜின் அக்கா வீட்டு அருகிலேயே அலைபேசி அணைக்கப்பட்டது. போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, நேற்று மாலை கண்ணாத்தாள் வீட்டின் அருகே வந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை.
வீட்டின் பின்பக்கம் சென்றுபார்த்தபோது, அங்கு சமமற்ற நிலையில் இருந்த நிலப்பகுதியில் போலீஸார் லேசாகத் தோண்டியுள்ளனர். ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே தெரிந்தது. இதையடுத்து தம்பதியரைக் கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கரூர் மற்றும் வெள்ளக்கோவில் போலீஸார் விசாரித்தனர்.
மேலும் செல்வராஜின் அக்கா கண்ணாத்தாள் ஏதேனும் சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை செய்தாரா அல்லது வேறு காரணங்களா என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்தனர். கண்ணாத்தாளின் மகள் பூங்கொடி, மருமகன் ஈரோட்டைச் சேர்ந்த நாகேந்திரன் ஆகியோரும் அந்த வீட்டில் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.
இந்நிலையில், தம்பதியர் கொலை வழக்கில், செல்வராஜின் அக்கா கண்ணாத்தாள் மற்றும் அவரின் மருமகன் நாகேந்திரன் ஆகிய இருவரை இன்று (அக்.14) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்தது, உடலை மறைத்தது என இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.