

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனின் கூட்டாளி, சீராத்தோப்பு சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த 2-ம் தேதி அதிகாலை சுவரைத் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் தரைத்தளத்தில் இருந்த ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை வழித்தெடுத்துச் சென்றனர்.
கட்டிடத்தின் முன்புறம் 10-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் உள்ள நிலையில் ஒன்றரை அடி கனமுள்ள சுவரை எப்படித் துளையிட்டார்கள் என்பதும், உள்ளே நுழைந்தவர்கள் விலங்குகள் முகம் பொறித்த முகமூடி அணிந்து கொள்ளையடித்ததும், ஒரு இடத்தில்கூட சிசிடிவியில் சிக்காததும், செல்போன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தாதும் போலீஸாருக்கு பெரிய அளவில் துப்பு துலங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
வடமாநிலக் கொள்ளையர்கள் என போலீஸார் விசாரணையை வேறு திசையில் நகர்த்த, திருவாரூர் அருகே வாகனச் சோதனையில் வந்த இருவரை போலீஸார் துரத்த, ஒருவர் சிக்க ஒருவர் தப்பி ஓடினார். சிக்கியவர் மணிகண்டன். அவரிடமிருந்து 4.5 கிலோ தங்க, வைர நகைகள் சிக்கின. தப்பி ஓடியவர் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் உறவினரும் கூட்டாளியுமான சீராத்தோப்பு சுரேஷ் எனத் தெரியவந்தது.
இதன்பின்னர் வழக்கு வேகம் பெற்றது. சீராத்தோப்பு சுரேஷ், முருகன், தினகரன் உள்ளிட்டோரை போலீஸார் தேடிவந்த நிலையில் கடந்த 10-ம் தேதி சீராத்தோப்பு சுரேஷ் (28) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திருச்சி போலீஸார் திருச்சி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, போலீஸாருக்கு நீதித்துறை நடுவர் திரிவேணி அனுமதி அளித்தார்.
சீராத்தோப்பு சுரேஷை வரும் 21.10.2019 வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்தார். போலீஸார் துன்புறுத்தக் கூடாது, 2 நாட்களுக்கு ஒரு முறை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதித்துறை நடுவர் திரிவேணி உத்தரவிட்டார்.