Published : 14 Oct 2019 01:10 PM
Last Updated : 14 Oct 2019 01:10 PM

கொள்ளை, ரவுடியிசத்தின் கூடாரமாக மாறும் காஞ்சிபுரம்? பெண் மருத்துவர் காரை வழிமறித்து கத்திமுனையில் 24 சவரன் வழிப்பறி

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வழிப்பறி அதிகம் நடக்கும் பகுதியாக மாறி வருகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள், வாகனத்தில் செல்வோரைக் குறிவைத்து வழிப்பறி செய்யும் கும்பலால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவில் வசிப்பவர் அஞ்சலி (45). மருத்துவரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். தினமும் மருத்துவப் பணிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். நேற்று இரவு வழக்கம்போல் மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்துவிட்டு பணி முடித்துவிட்டு காஞ்சிபுரம் நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டி வந்தார்.

கார் ராஜகுளம் ஏனாத்தூர் சாலையில் வந்தபோது, அவரது காரை பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் முந்திச் சென்றது. காரின் முன்பக்கம் சென்ற அவர்கள் காரை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர். காரின் முன்பக்கம் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வழிமறித்து நிறுத்தியதும் மருத்துவர் அஞ்சலி செய்வதறியாது காரை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார்.

கார் நின்றதும் காரை நோக்கி வந்த மர்ம நபர்கள் கார் கண்ணாடியை இறக்கச் சொல்ல ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று நினைத்த மருத்துவர் செல்போனை எடுத்து போலீஸை அழைக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைத்த அந்த நபர்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துள்ளனர். மருத்துவர் பயத்தால் அலறியுள்ளார். அவரிடமிருந்து செல்போனைப் பறித்த அந்த நபர்கள் கத்திமுனையில் அவரிடம் இருந்த 24 சவரன் தங்க நகைகளைப் பறித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். கத்தி முனையில் நகை, செல்போனைப் பறித்துச் சென்றதால் அதிர்ச்சியில் இருந்த மருத்துவர் அஞ்சலி, தனது கார் கண்ணடியை உடைத்து தன்னிடமிருந்த 24 சவரன் நகைகளைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னணி என்ன?

சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் மருத்துவரிடம் விசாரணை நடத்தினர். வழிப்பறி குறித்து வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம். அவர்கள் சம்பளம் வாங்கும் தினத்தன்று தனியாக வரும் நபர்களை கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி செய்வதற்கென்றே பல கும்பல்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளன. பணத்தைப் பறிகொடுத்த வடமாநிலத் தொழிலாளர்கள் போலீஸில் புகார் அளிக்காதது இவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது என அப்பகுதி வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று வாகன ஓட்டிகளை வழிமறித்து தாக்கி வழிப்பறி செய்வதும் அதிகரிக்கிறது என்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எப்போதும் மணற்கொள்ளை, அதையொட்டிய ரவுடிகள் ஆட்டம், அதற்காக நடக்கும் குற்றச்சம்பவங்கள் அதிகம். அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் உள்ள கார் உள்ளிட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்து, அங்குள்ள முதலாளிகளை மிரட்டுவது, டெண்டர் எடுப்பது போன்ற காரணங்களுக்காக குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.

மாவட்ட எஸ்.பி அளவிலான அதிகாரி தலைமையின் கீழ் காவல்துறை பணிகள் நடக்கின்றன. திமுக ஆட்சியில் சென்னை புறநகரைக் கணக்கில்கொண்டு புறநகர் ஆணையரகம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அது கலைக்கப்பட்டது. புறநகர் ஆணையரகம் விரிவுபடுத்தப்பட்டு காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆணையரகம் அமைக்கப்பட்டிருந்தால் காவல்துறை கண்காணிப்பு மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

காஞ்சிபுரத்தில் வளம் கொழிக்கும் தொழிற்சாலைகள், தொழிலாளர்களை மையமாக வைத்து வளர்ந்த ரவுடியிசம் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் நடக்கும் மணற்கொள்ளை காரணமாக சட்டம் ஒழுங்கு மோசமான நிலையை நோக்கி மீண்டும் செல்கிறது.

இரண்டு பெரிய கோஷ்டிகள் தலைமையில் ரவுடியிசம் வேகமாக வளர்வதும் ஒருவரை ஒருவர் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதை பொருட்கள் ஆதிக்கத்தை சென்னை போலீஸார் கட்டுப்படுத்துவதால் அவை அனைத்தும் காஞ்சிபுரத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வெளிமாநிலத் தொழிலார்களைப் பாதுகாக்கவும், பொதுமக்கள் உடமைக்கும், உயிருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்கவேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x