நாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக் கணக்குகளை முடக்கி விசாரணை; வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கை

க்ரீன் பார்க் தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை
க்ரீன் பார்க் தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை
Updated on
2 min read

நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள க்ரீன் பார்க் தனியார் கல்வி நிறுவனம், அதற்கு சொந்தமான நீட் தேர்வு மையம் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் 4-ம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் போதுப்பட்டியில் க்ரீன் பார்க் தனியார் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனம் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சியும் நடத்தப்படுகிறது. நாமக்கல், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கரூர் மற்றும் சென்னை ஆகிய 4 இடங்களில் இக்கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான நீட் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நீட் பயிற்சி மையத்தில் சேருவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு எவ்வித பில்லும் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இதன்மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 11-ம் தேதி காலை சென்னை, திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 குழுக்களாகப் பிரிந்து போதுப்பட்டியில் உள்ள பள்ளி மற்றும் அதற்கு சொந்தமான நீட் பயிற்சி மையங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளும் பிரபல தனியார் கல்வி நிறுவனம்

இதேபோன்று, போதுப்பட்டியில் உள்ள க்ரீன் பார்க் பள்ளியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமாக நாமக்கல்லில் உள்ள 3 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறையினர் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், 2-ம் நாள் சோதனையின்போது கணக்கில் வராத ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை உயரதிகாரிகள் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

பள்ளி முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்கள்

இதனிடையே 4-ம் நாளாக இன்றும் (அக்.14) க்ரீன் பார்க் பள்ளி, நீட் பயிற்சி மையங்கள், நிர்வாகிகள் வீடு, அவர்களிடம் உள்ள அசையும், அசையா சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட தொகை உள்ளிட்டவை குறித்து சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து 4-ம் நாளாக இக்கல்வி நிறுவனத்தில் நடைபெறும் சோதனை, மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இக்கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in