தேனி அரசுப் பள்ளியில் மோதல்: வகுப்பறையில் மாணவர் கொலை

தேனி அரசுப் பள்ளியில் மோதல்: வகுப்பறையில் மாணவர் கொலை
Updated on
1 min read

தேனி

தேனி அல்லிநகரம் மட்டன் ஸ்டால் தெருவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி முருகன். இவரது 2-வது மகன் திருமால் (17). அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று பள்ளியில் உணவு இடைவேளையின்போது வகுப்பறையில் திருமாலும், இதே வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவரும் ஒருவரையொருவர் கேலி செய்து விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் சண்டையிடத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஆக்ரோஷமாக மோதினர். இந்நிலையில் திருமால் மயங்கியபடி கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், தலைமையாசிரியர் ஈஸ்வரனிடம் தெரிவித்தனர். உடனடியாக திருமாலை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே திருமால் உயிரிழந்தார்.

இதையடுத்து பள்ளி முன் கூடிய திருமாலின் உறவினர்கள், பெரியகுளம் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். "திருமாலை ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.

இவர்களிடம் டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

இதனிடையே, முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் பள்ளிக்குச் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். வகுப்பறையில் நடந்த கொலை சம்பவத்தால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருமாலை தாக்கியதாகக் கூறப்படும் மாணவரை தேனி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in