

அ.வேலுச்சாமி
திருச்சி
குடும்பத்தினரிடம் தனிப்படை போலீஸாரின் பிடி இறுகியதன் காரணமாகவே முருகன், சுரேஷ் ஆகியோர் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை தொடர்பாக திருவாரூர் மணிகண்டன், கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட முருகனின் சகோதரி கனகவல்லி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாகன சோதனையின்போது தப்பி ஓடிய கனகவல்லியின் மகன் சுரேஷ்(28) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் நேற்று பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளிகள் இருவரும் தங்களிடம் சிக்காமல், நீதிமன்றத்தில் சரணடைந்தது திருச்சி போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியபோது, “காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக விசாரணை நடத்தினர். அப்போது, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் முருகனின் மனைவி மஞ்சுளாவின் குடும்பத்தினர் வசித்து வந்தது தெரியவந்தது. உடனே அங்குசென்று மஞ்சுளாவின் தாய் முனியம்மா, தந்தை ஞானப்பா, சகோதரி சசிகலா, அவரது கணவர் செம்பையா, சகோதரர்கள் கணேஷ், ஷ்யாம் என அனைவரையும் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதேபோல, பெங்களூரு சிகாடிபாளையம் பகுதியில் வசித்து வந்த சுரேஷின் மனைவி குடும்பத்தினரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் முருகனின் மனைவி மஞ்சுளா மற்றும் 2 குழந்தைகள், சுரேஷின் மனைவி ஆகியோரையும் பிடிக்க முயற்சி செய்தனர்.
வேறு வழியில்லாததால் சரண்
போலீஸ் விசாரணையின் பிடி இறுகியதை அறிந்த முருகனும், சுரேஷூம் வேறு வழியின்றி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் முருகன் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவற்றின் விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜராகாமல் முருகன் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டுகளை நிறைவேற்றுவதற்காக 3 மாநில போலீஸாரும் பல ஆண்டுகளாக தேடி வந்தபோதும், யாரிடமும் அவர் சிக்கவில்லை. ஆனால், இப்போது வேறு வழியின்றி சரணடையும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
கர்நாடக போலீஸாருடன்...
முருகன் இப்போது எங்களிடம் பிடிபட்டிருந்தால், நேரடியாக திருச்சிக்கு கொண்டு வந்து விசாரித்து நகைகளை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், இப்போது பெங்களூருவிலுள்ள பழைய வழக்கு ஒன்று தொடர்பாக சரணடைந்திருப்பதால் உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடகா காவல் துறையின் ஒத்துழைப்பைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருமாநில காவல் துறை உயரதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்குள் முருகனை காவலில் எடுத்து, திருச்சிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.
வேறு வழக்குகளிலும் தொடர்பா?
இதற்கிடையே, செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த சுரேஷை அக்.14-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்பேரில் சுரேஷை, நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு கொண்டு வந்து மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் திருச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதேபோல, லலிதா ஜூவல்லரி வழக்கில் முருகனை கைது செய்வதற்கான உத்தரவு கடிதத்தை பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் அளித்து, அவரை திருச்சிக்கு அழைத்து வந்து ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும், அதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்குமான சட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் கேட்டபோது, “முருகன், சுரேஷ் ஆகிய இருவரும் சரணடைந்து விட்டதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான சட்ட நடைமுறைகள் தொடங்கிவிட்டன. முருகன், சுரேஷ் ஆகியோரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்படும். இவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும்” என்றார்.