Published : 12 Oct 2019 09:07 AM
Last Updated : 12 Oct 2019 09:07 AM
கோவை
கோவையில் புகைப்படங்களை ஹேக் செய்து, பணம் கேட்டு மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
கோவை சித்தாப்புதூரை சேர்ந்த வர் முத்துக்குமார். இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாளிடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில்,‘‘ நான் சித்தாப்புதூரில் புகைப்பட நிறுவனத்தை நடத்தி வருகிறேன். திருமணம், விசேஷ நிகழ்ச்சிகள், பொது நிகழ்வுகள் தொடர்பாக புகைப்படங்கள் எடுத்து வழங்கி வருகிறோம். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்து எடிட் செய்யும் ஒரு கணிப் பொறியில், மொபைல் வழியாக இணைய இணைப்பு பெற்று யூ டியூப் மூலம் பாடல் பார்த்துக் கொண்டிருந்தபோது, கணிப் பொறியிலிருந்த புகைப்பட கோப்புகள் உட்பட எல்லா கோப்பு களும் ‘ஹேக்’ செய்யப்பட்டு திறக்க முடியாதபடி மாறியிருந்தது.
அதில், கேயுயுபி என்ற ஆங்கில எழுத்துகளுடன் ஒரு கோப்பு வந்தது. திறக்க முடியாதபடி உள்ள கோப்புகளை, பழைய முறைக்கு மாற்றித் தர 970 டாலர் தொகை தர வேண்டும் எனக் குறிப்பிட்டு, ஒரு பிரத்யேக இணையதள முகவரியை அனுப்பியிருந்தனர். புகைப்பட கோப்புகள் திறக்க முடியாதபடி செய்யப்பட்டதால், வாடிக்கை யாளருக்கு புகைப்படங்களை ஒப்படைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரித்த போது, முத்துக்குமார் போல, மேலும் 6 பேரின் கணிப்பொறியும் ஹேக் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.