Published : 11 Oct 2019 04:22 PM
Last Updated : 11 Oct 2019 04:22 PM

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: சிவகங்கை நர்சிங் கல்லூரி முதல்வர் கைது

சிவகங்கை

அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை பச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 16-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் மணமக்கள் சென்னையில் குடியேறினர். சில நாட்களுக்கு முன் புதுமணப்பெண் அடிக்கடி தலைச் சுற்றுவதாகவும் வாந்தி வருவதாகவும் கூறியதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனை பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் தெரிந்து சந்தோஷமடைந்துள்ளனர். ஆனால் அந்த சந்தோஷம் சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. அந்தப்பெண் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிய வந்தது.

திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் எப்படி மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறாய் என மணமகனின் வீட்டார் கேட்டபோது, புது மணப்பெண் கூறிய தகவலைக்கேட்ட மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

திருமணம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு வரை அவர் சிவகங்கையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அக்கல்லூரியின் முதல்வர் சிவகுரு துரைராஜ்(61) என்பவர் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்றும், அதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் புதுமணப்பெண் கூறியுள்ளார்.

இதைக்கேட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் மணமகனின் வீட்டார் போலீஸில் புகார் அளித்தனர்.பாதிக்கப்பட்ட பெண் கடந்த 10-ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தியதில் பாலியல் வன்முறை நிகழ்ந்தது உண்மை எனத் தெரிய வந்தது.

இதை அடுத்து நர்சிங் கல்லூரி முதல்வர் சிவகுரு துரைராஜ் மீது ஐபிசி பிரிவு 417 (ஏமாற்றுதல்) 376 (பாலியல் பலாத்காரம்) 294பி (அவதூறாகப் பொதுவெளியில் பேசுதல்) 506 (1)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

புகார் அளித்த அன்றே சிவகுரு துரைராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிவகுரு துரைராஜ் நடத்தி வந்த தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வேறு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலும் புகார் தெரிவிக்கலாம், அவர்கள் பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x