

பெங்களூரு
திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் கொள்ளையன் முருகன் பெங்களூருவில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் சுவரில் துளையிட்டு சாமர்த்தியமாக ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
போலீஸாரைத் திணறடித்த இந்தக் கொள்ளையில் கைரேகை, கொள்ளையர் உருவம், சிசிடிவி காட்சிகள் எதுவும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் இருவர் மட்டும் முகமூடி, கையுறை அணிந்து கொள்ளையடித்தது சிசிடிவி காட்சியில் சிக்கியது.
வெகு அழகாகத் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொள்ளையை நடத்தியது வடமாநில கொள்ளையர்கள் என நினைத்திருந்த நேரத்தில், திருவாரூரில் மணிகண்டன் என்பவர் 4.5 கிலோ நகைகளுடன் சிக்கினார்.
உடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நகைகளில் லலிதா ஜுவல்லரி ஹால்மார்க் முத்திரை இருந்தது. இதையடுத்து கொள்ளைக் கும்பல் குறித்த முழுத்தகவலும் வெளியானது. தென்னிந்தியா முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய திருவாரூர் முருகன் கும்பல்தான் கொள்ளையில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது.
சீராத்தோப்பு சுரேஷை போலீஸார் தேடிவந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். கொள்ளைக்கூட்டத் தலைவன் முருகனை போலீஸார் நெருங்கி வரும் வேளையில்தான் சிக்கிவிடுவோம் என பயந்துபோன முருகன் இன்று காலை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முருகன் நடத்திய கொள்ளைச் சம்பவங்களில் அதிக சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக போலீஸாரிடம் மட்டுமே பிடிப்பட்ட முருகன் பின்னர் தலைமறைவானார்.
பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை, திருச்சி தனிப்படை போலீஸார் நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். திருச்சி கொள்ளை தவிர முருகன் கும்பல் சென்னையில் 19 இடங்களில் கைவரிசை காட்டிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
போலீஸாரிடம் இதுவரை சிக்காத முருகன் தற்போது பிடி இறுகுவதை அடுத்து சரணடைந்துள்ளார். இந்த வழக்கில் முருகனின் முக்கிய கூட்டாளிகளான தினகரன், காளிதாஸ் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர்.