

இரா.கார்த்திகேயன்
திருப்பூர்
திருப்பூரில் பெண்களின் இருசக்கர வாகனங்களில் இருக்கை லாக்கை உடைத்து, பொருட்களை திருடும் கும்பல் குறித்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகரில் ஏராளமான பெண்கள் அன்றாடம் வேலைக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, பின்னலாடை நிறுவனங்களில் பணிசெய்யும் பெண் களின் எண்ணிக்கை பல லட்சம். சம்பாத்தி யத்தில், ஒரு சிறிய சேமிப்பை ஒதுக்கி, இருசக்கர வாகனங்களை வாங்கு கின்றனர். தினசரி 5 கி.மீ வரை கூட இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்லும் பெண்களும் உண்டு.
இருசக்கர வாகனத்தின் இருக்கை லாக் பகுதியில் அலைபேசி மற்றும் மணிபர்ஸ் ஆகியவற்றை பெண்கள் வைப்பதுண்டு. ஆனால் அவை ஆபத்து களங்களாக மாறி உள்ள தாக சொல்கின்றனர், மாநகர போலீஸார்.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘இருசக்கர வாகனங்களின் இருக்கையின் கீழ் வைக்கப்படும் பொருட்கள் திருடப்படும் சம்பவம் நகரில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெண்களின் வாகனங்களை குறிவைத்து இந்த திருட்டு நடைபெறுகிறது. பெண்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் உள்ள ‘இருக்கை லாக்’ என்பது எளிதில் உடையக் கூடியது என்பதால், கூடுமானவரை நகை, பணம் மற்றும் அலைபேசி களை இருக்கையின் அடியில் உள்ள பகுதியில் வைக்க வேண்டாம்’ என்றனர்.
திருப்பூர் அப்பாச்சி நகர் பிரதான சாலையில் உள்ள பாலாமணி என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியில் உள்ள ஏசி பழுது நீக்கும் மையத்துக்கு சென்றுள்ளார். வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது வாகனத்தின் இருக்கை லாக் உடைக்கப்பட்டு, அதில் இருந்த மணிபர்ஸ் மற்றும்அலைபேசி திருடப்பட்டது தெரியவந்தது.
அலைபேசி எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டபோது, 100 மீட்டர் தொலைவில்உள்ள அலுவலகத்தின் காவலாளி கீழே கிடந்த அலைபேசி மற்றும் மணிபர்ஸை எடுத்து தந்துள்ளார். ஆனால் மணிபர்ஸில் இருந்த ரூ.9500 திருடப்பட்டிருந்தது. பாலாமணி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.
அதில் இருசக்கர வாகனத்தில் வரும் அந்த நபர், அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் இருக்கை லாக்கை உடைத்து அதில் இருந்து பர்ஸ் மற்றும் அலைபேசியை திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
அதேபோல ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பேருந்து நிறுத்தத்தின் மற்றொரு பகுதியிலும் பெண்களின் இருசக்கர வாகன லாக்கை உடைத்து ஒருவர் திருடுவது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால் பெண்கள் தங்களது வாகனங்களில் நகை, அலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றை வைத்துக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.