Published : 10 Oct 2019 03:32 PM
Last Updated : 10 Oct 2019 03:32 PM

அண்ணா சாலையில் பெண் வழக்கறிஞர் மீது தாக்கு; நாட்டு வெடிகுண்டு வீச்சு: பழிக்குப் பழி தீர்க்க கொலை முயற்சி

சென்னை

அண்ணா சாலை அருகே பழிக்குப் பழி வாங்கும் விதமாக வெட்ட முயன்றதில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் பெண் வழக்கறிஞரும் அவருடன் வந்தவர்களும் காயமடைந்தனர். வெடிக்காத நாட்டு வெடிகுண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர் மலர்க்கொடி (50). இன்று மதியம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு அண்ணா சாலை நோக்கி ஆட்டோவில் வழக்கறிஞர் மலர்க்கொடியுடன் அழகுராஜா (21), மணிகண்டன்(19), விஜயகுமார் (30) ஆகியோர் வந்துகொண்டிருந்தனர்.

சென்னை அண்ணா சாலை -ஆதித்தனார் சாலையை இணைக்கும் பிளாக்கர்ஸ் சாலை கேசினோ திரையரங்கம் அருகே வரும்போது. அப்போது எதிர்ப்புறமாக ஆட்டோவில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து அழகுராஜாவை வெட்டியுள்ளனர்.

உடன் இருந்த ஆறுமுகத்துக்கும் வெட்டு விழுந்தது. இதில் தடுக்க முயன்ற மலர்க்கொடிக்கும் வெட்டு விழுந்தது. அப்போது அந்த நேரத்தில் அழகுராஜா ஆட்டோவில் இருந்த நாட்டு வெடிகுண்டை அவர்களை நோக்கி எறிய, அது பலத்த சத்தத்துடன் ஆட்டோ மீது விழுந்து வெடித்துள்ளது.

குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சிதறி ஓடினர். அழகுராஜாவை வெட்டிய கும்பலும் தப்பி ஓடியது. பரபரப்பான சூழ்நிலையில் தலையில் வெட்டுக் காயம்பட்ட அழகுராஜா, காதருகே காயம்பட்ட மலர்க்கொடி, கையில் காயமடைந்த ஆறுமுகம் ஆகிய மூவரையும் பொதுமக்கள் மீட்டு அவர்களை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அழகுராஜா தன்னுடன் ஆட்டோவில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்துள்ளதும், அதில் வெடிக்காத ஒரு நாட்டு வெடிகுண்டு ஆட்டோவில் இருந்ததையும் அறிந்து அதை சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் கைப்பற்றினர். மேலும் அந்த நேரத்தில் தப்பி ஓடிய அரவிந்தன், அப்பு ஆகிய இருவரை அங்கு நின்றிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆட்டோவில் அழகுராஜாவுடன் வந்த மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். போலீஸார் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டதில் இரண்டு விதமான கருத்துகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி பெசன்ட் சாலையில் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையின் பின்னணியில் அழகுராஜா இருந்ததாகவும் அதற்குப் பழி வாங்கும் நோக்கில் அப்பாஸின் மைத்துனர் ஷேக் ஆட்களை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோன்று அழகுராஜா இருக்கும் கட்சியின் பிரமுகருக்கும் அழகுராஜாவுக்கும் முன் பகை இருந்ததாகவும் அதற்காக அவர் ஆட்களை ஏவி இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

ஆனால், அப்பாஸ் கொலை நடந்து சரியாக ஒரு வருடம் ஆகும் நிலையில் அதே மாதத்தில் அழகுராஜா கதையை முடிக்கவேண்டும் என்கிற ரீதியில் அவரது ஆட்கள் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

சென்னைக்கு சீன அதிபர் நாளை வரும் நேரத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் ரவுடிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும், நாட்டு வெடிகுண்டை தன்னுடன் எடுத்துவந்து அதை வீசி சண்டையிடுவதும் அனைத்தையும் கேலிக்குள்ளாக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் இதுவரை சென்னையில் இல்லாமல் காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, மதுரை , நெல்லை, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்த நிலையில் தற்போது சென்னையில் ரவுடிகள் இடையே பரவியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகுராஜா முன்னர் ஐஸ் ஹவுஸில் பிரபல ரவுடியாக வலம் வந்த தோட்டம் சேகர் என்கிற குள்ள சேகர் என்பவருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தோட்டம் சேகர் ஐஸ்ஹவுஸ் பகுதியில் 90களில் பெரிய ரவுடியாக வலம் வந்தவர். அப்போதைய ஆளுங்கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த அவர் பிரபல ரவுடி வீரமணி கும்பலால் பாலாஜி நகரில் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது வாரிசுகள் ஐஸ் ஹவுஸ் பகுதியில் தலையெடுத்து வருகின்றனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட நிலையில் குண்டுவெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நாட்டு வெடிகுண்டை அழகுராஜா எங்கு வாங்கினார், அவருக்கு சப்ளை செய்தது யார் என போலீஸார் விசாரிக்க உள்ளனர். விரைவில் அழகுராஜா வீட்டை சோதனையிட்டு மேலும் ஏதாவது நாட்டு வெடிகுண்டுகள் உள்ளதா? என சோதனையிட உள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் அழகுராஜா மற்றும் உடன் வந்தவர்கள் நாட்டு வெடிகுண்டு எடுத்து வந்ததும் அதைப் பயன்படுத்தியதாலும் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x