Published : 09 Oct 2019 03:21 PM
Last Updated : 09 Oct 2019 03:21 PM

பள்ளிக்கரணையில் பயங்கரம்; தாயைக் கொன்ற தனயன்: தானும் தற்கொலைக்கு முயற்சி

சென்னை

பள்ளிக்கரணையில் மன உளைச்சலில் இருந்த மகன், கோபத்தில் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டார்.

பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய் கணேஷ் நகரில் வசித்தவர் பாலகிருஷ்ணன் (75). இவரது மனைவி சரஸ்வதி (72). இவர்களது மகன் ரமேஷ் (43). இவருக்கும் பவானி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மாமியார்- மருமகள் பிரச்சினை காரணமாக ரமேஷுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்படும்.

தந்தை பாலகிருஷ்ணன் இருந்தவரை பிரச்சினை இல்லாமல் போனது. இடையில் 8 மாதங்களுக்கு முன் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் ரமேஷின் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் தந்தை பாலகிருஷ்ணன் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதன் பின்னர் ரமேஷ் மீது குடும்பப் பொறுப்புகள் விழ அவர் நிம்மதி இல்லாமல் இருந்துள்ளார்.

தாயார் உடல் நலமில்லாமல் போவதும், அடிக்கடி தாயாருடன் ஏற்படும் பிரச்சினைகளும், தனது மனைவி வீட்டை விட்டுப் போனதற்கு தாயார்தான் காரணம் என்றும் நினைத்து ரமேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தாயாருடன் வாக்குவாதம் ஏற்பட, கோபத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தாயார் சரஸ்வதியின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் தானும் அதே கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார். அப்போது அவரது வயிற்றுக்குள் கத்தி சிக்கிக் கொண்டது. இதில் வலியால் அவர் அலற, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததையும், வயிற்றில் கத்தி செருகிய நிலையில் ரமேஷ் துடிப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரமேஷ் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளிக்கரணை போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டதில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்த தாய் சரஸ்வதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேஷுக்குத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பந்தமாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் 302- பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரமேஷைக் கைது செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x