வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார் பேராசிரியை நிர்மலா தேவி
ஸ்ரீவில்லிபுத்தூர்
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் இன்று (அக்.9) ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்ற அறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பேராசிரியை நிர்மலா தேவி ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். உதவிப் பேராசிரியர் முருகன் ஆஜராகவில்லை. அதை எடுத்து வழக்கு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டது.
அதை எடுத்து பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார்கள்.
அப்பொழுது வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிமன்றத்திற்குள் பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெண் காவலர்கள் நிர்மலா தேவியை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பேராசிரியை நிர்மலா தேவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.
எனக்கு மிரட்டல் வருகிறது.. என் குழந்தைகளுக்கு ஆபத்து..
தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அளித்த பேட்டியில், "பேராசிரியை நிர்மலா தேவி மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டத்துக்கு உட்பட்டு வழக்காடி வெற்றி பெறுவோம்.
உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக பேராசிரியை நிர்மலாதேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென இன்று நீதிமன்ற அறையில் பேராசிரியை நிர்மலா தேவி மயங்கி விழுந்தார். அவரிடம் கேட்டபோது எனக்கு பயமாக இருக்கிறது என்றும் மிரட்டல்கள் வருகின்றன என்று கூறினார். இன்று அதிகாலை 2 மணிக்கு காலையில் 6 மணிக்கு பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொலைபேசியில் பேசியபோதும் குழப்பமான சூழ்நிலையிலேயே அவர் இருந்தார்.
யார் மிரட்டல் விடுகிறார்கள் என கேட்டபோது எனது குழந்தைகளுக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறினார். மடியில் கனம் இல்லாததால் வழியில் எங்களுக்கு பயமில்லை. இந்தப் பொய் வழக்கில் நாங்கள் வெற்றி பெற. அரசியலில் உச்சத்தில் உள்ள மனிதர்கள் தப்பிப்பதற்காகவே பேராசிரியை நிர்மலா தேவி மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்றார்.
