

திருச்சி
லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக முருகன், சுரேஷ் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக காவல் அதிகாரிகளுடன் ஆணையர் அ.அமல்ராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த 2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி திருவாரூரில் வாகன சோதனை யின்போது, திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34) என்பவரைப் பிடித்தனர். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூர் சீராத் தோப்பு பேபி டாக்கீஸ் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(28) தப்பியோடிவிட்டார். அவர் விட்டுச்சென்ற பெட்டியில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தன.
பிடிபட்ட மணிகண்டனிடம் விசாரித்த போது சுரேஷ், அவரது தாய்மாமன் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன்(45) ஆகியோர் இக்கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபர்களாக செயல்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீஸார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனின் சகோதரியும், சுரேஷின் தாயாருமான கனகவல்லியையும்(57) கைது செய்தனர். இவர்களிடமிருந்து 4.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திரா, கர்நாடகாவில்
இதற்கிடையே முருகன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டால் மட்டுமே மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்ய முடியும் என்பதால், அவர்கள் இருவரையும் பிடிக்க திருச்சி மாநகர போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக திருவாரூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவிலுள்ள இவர்கள் இருவரின் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக குற்றப்பிரிவு, சைபர் க்ரைம், தனிப்படை ஆகியவற்றில் பணிபுரியும் போலீஸார், துணை ஆணையர் மயில்வாகனன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு முருகன், சுரேஷைத் தேடும் பணி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது.
60 பேரிடம் விசாரணை
இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியபோது, “முருகன், சுரேஷ் ஆகிய இருவரும், கடந்த சில ஆண்டுகளாகவே தங்களது குடும்பத்தினர் இருக்குமிடத்தை உறவினர்களுக்குக்கூட தெரிவிப்பது இல்லை. நல்லது, கெட்டது என எதற்கும் செல்வதில்லை. வழக்கு விசாரணைக்கு சென்று வந்தபோது ஏற்பட்ட பழக்கத்தில், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இவர்கள் திருவாரூரில் மயிலாடுதுறை சாலையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. தனிப்படையினர் அங்குசென்று பார்த்தபோது, சுரேஷ் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறை வாகிவிட்டார். பெங்களூருவில் உள்ள அவரது மனைவி வழி உறவினர்கள் வீட்டில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதா என விசாரித்து வருகிறோம்.
முருகனின் குடும்ப விவரம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. மாற்றுத்திறனுடைய சிறுவன், ஒரு சிறுமி என 2 குழந்தைகளை அவர் தத்தெடுத்து வளர்ந்து வந்துள்ளார். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என தெரியவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர். அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.
அதேபோல முருகன், சுரேஷ் ஆகிய இருவருமே பெரும்பாலும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வந்துள்ளனர். தேவையெனில் ஆளுக்கொரு செல்போன் வாங்கி, அதன் எண்ணை அவர்கள் இருவருக்குள் மட்டுமே பகிர்ந்து பேசி வந்துள்ளனர். இதனால் அவர்களின் எண்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. மற்ற நபர்களிடம் பொதுத் தொலைபேசி மூலமாகவே பேசி வந்துள்ளதாக தெரியவந்ததால், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 60 பேரை பிடித்து விசாரித்தோம். சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.
இதற்கிடையே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர்கள் என்.எஸ்.நிஷா(சட்டம், ஒழுங்கு), ஆ.மயில்வாகனன் (குற்றம், போக்குவரத்து) ஆகியோருடன் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் நேற்று ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாநகர காவல் துறையின் வழக்கமான செயல்பாடுகள் மற்றும் லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துணை ஆணையர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.
விரைவில் நல்ல செய்தி
இதுகுறித்து காவல் ஆணையர் அ.அமல்ராஜூவிடம் கேட்டபோது, “வழக்கு விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார்.
இதற்கிடையே, திருவாரூரில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் ஆந்திராவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் அளித்த பதில்கள் முரண்பாடாக இருந்ததால் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.எந்தச் சூழ்நிலையிலும் வாழப் பழகிய முருகன்
முருகன் குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியபோது, “வங்கிகள், நகைக்கடைகள் என பெரியளவில் கொள்ளையடித்த போதிலும் முருகனிடம் தற்போது அதிக சொத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணத்தையெல்லாம் தெலுங்கு சினிமாவில் முதலீடு செய்து, இழந்துவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் பணம் இருக்கும்போது வசதிபடைத்த வாழ்க்கை வாழ்வதும், இல்லாதபோது பிச்சைக்காரரைப் போல வாழ்வதும் முருகனின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. எனவே, தற்போதுகூட அவர் கொள்ளையடித்த நகைகளுடன் ஏதாவது விடுதி அல்லது வீட்டில் தங்கியிருப்பார் எனச் சொல்ல முடியாது. கோயில்கள், பேருந்து நிலையங்கள், நடைபாதைகளில்கூட அங்கிருக்கும் வீடற்றவர்களுடன் சேர்ந்து பதுங்கியிருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.