

சென்னை
சீன அதிபர் வருகையையொட்டி போராட்டம் நடத்தத் திரண்டு சேலையூரில் கைதான 8 திபெத்தியர்களுக்கு உதவியதாக ஆங்கிலப் பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது சீனாவின் வாதம். அது தனிநாடாக அறிவிக்கப்படவேண்டும் என திபெத்தியர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு சீன அதிபர் வருகை புரிந்து மாமல்லபுரத்தில் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் சீன அதிபர் வரும் நேரத்தில் திபெத் விடுதலைக்காகப் போராடி வரும் எழுத்தாளர், செயற்பாட்டாளர் தென்சிங்கே கோட்டக்குப்பத்தில் கடந்த சனிக்கிழமை மாலை தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.
தென்சிங்கே ஏற்கெனவே இரண்டு முறை சீன அதிபர்களை எதிர்த்து 'Free Tibet' (திபேத் விடுதலை) என்ற வாசகம் ஏந்திய கொடியைப் பிடித்து, போராடியதால் 2002-ல் மும்பையிலும், 2005-ல் பெங்களுரூவிலும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை வரும் சீன அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடத்த சென்னையில் உள்ள திபெத்தியர்கள் சிலர் முடிவெடுத்தனர். சேலையூர் ஆதி நகரில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் மாணவர்கள்போல் தங்கினர். ஆனால் அவர்களை மோப்பம் பிடித்த உளவுத்துறை கடந்த ஞாயிறு அன்று அவர்களை வளைத்துப் பிடித்து கைது செய்து 8 பேரையும் சிறையில் அடைத்தது.
இவர்களுக்கு அறை எடுத்துத்தர உதவியதாக கேளம்பாக்கத்தில் வசிக்கும், டென்சில் நோர்பு (34) என்பவரை மத்திய உளவு அமைப்பு கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.