Published : 05 Oct 2019 07:14 PM
Last Updated : 05 Oct 2019 07:30 PM
திருச்சி
திருச்சி நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் கைதான மணிகண்டன் அடித்துக் கேட்டாலும் சொல்லமாட்டேன் என அடம் பிடிப்பதால் விசாரணை அடுத்தகட்டத்துக்கு நகராமல் நிற்கிறது.
திருச்சி சத்திரம் பேருந்து அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த 2-ம் தேதி அதிகாலை உள்ளே புகுந்த கும்பல் ஒன்று கடையின் அடித்தளத்தில் உள்ள தங்க, வைர நகைகளை மொத்தமாக கொள்ளையடித்துச் சென்றது. இதன் மதிப்பு ரூ.13 கோடி வரை இருக்கும் எனக் கூறப்பட்டது.
சுவரில் துளையிட்ட அந்தக் கும்பல் சாமர்த்தியமாக முகமூடி, கையுறை அணிந்து, செல்போன், வாகனம் எதையும் பயன்படுத்தாமல் நகைகளைத் திருடி, வந்த சுவடின்றி மாயமானது. இதனால் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸார் மிகுந்த சிரமப்பட்டனர். அணிந்திருந்த உடை, உள்ளே புகுந்த விதம் அனைத்தையும் வைத்து வடமாநிலக் கொள்ளையர்கள்தான் திருடியிருக்கக்கூடும் எனக் கருதி போலீஸார் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளைத் தேடிக் கண்டறிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருவாரூர் முருகன்
இந்நிலையில், திருவாரூர் அருகே வாகனச் சோதனையில் போலீஸார் தடுத்தும் நிற்காமல் சென்ற இருவரை துரத்திச் சென்று பிடித்தபோது ஒருவன் ஓடிவிட, மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து 4.5 கிலோ தங்க நகைகள் கொண்ட பை சிக்கியது. அதில் லலிதா ஜுவல்லரி பார்கோடு, ஹால்மார்க் இருந்ததால் அது லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகை என உறுதியானது.
தப்பி ஓடிய நபர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் உறவினர் என்றும் தெரியவந்தது. இதன்மூலம் திருவாரூர் முருகன் கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. போலீஸார் பிடியில் சிக்கிய மணிகண்டனும் அதே கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட முருகன், சுரேஷ், தினகரன், காளிதாஸ், லோகநாதன், ரகு ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். பிடிபட்ட மணிகண்டனிடம் போலீஸார் கடந்த 24 மணிநேரமாக நடத்திய விசாரணையில் ஒரு அங்குலம்கூட அடுத்தகட்டத்தை நோக்கி விசாரணை நகரவில்லை என்று தெரியவந்ததுள்ளது.
அடித்துக் கேட்டாலும் சொல்லாதே என்று வடிவேல் பட காமெடிபோல், ''எனக்கு எதுவும் தெரியாது. நான் வீட்டிலிருந்து வெளியே மது அருந்த வந்தேன். என்னிடம் ஒரு பையைக் கொடுத்தார்கள். சுரேஷுடன் நான் கிளம்பிச் செல்லும்போது வாகனச் சோதனையில் நிற்காததால் துரத்தியபோது சிக்கினேன்.
சிக்கிய நகைகள்
எனக்கு அவ்வளவுதான் தெரியும். என்னிடம் கொடுத்த பையில் என்ன இருந்தது என்பதுகூட எனக்குத் தெரியாது. பிறகு எப்படி நான் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்க முடியும்? லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது'' என்று மணிகண்டன் கூறியதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கொள்ளை எப்படி நடந்தது, யார் திட்டம் போட்டுக் கொடுத்தது, யார் யார் கொள்ளையில் ஈடுபட்டது, சுவரில் துளையிட்டது எப்படி, ஜுவல்லரியில் யாராவது உடந்தையா, முருகன் உள்ளிட்ட மற்ற கூட்டாளிகள் எங்குள்ளனர் என்கிற எந்தத் தகவலும் கிடைக்காமல் போலீஸார் விசாரணையத் தொடங்கிய இடத்திலேயே நிற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பி ஓடிய சீராத்தோப்பு சுரேஷ்
போலீஸ் விசாரணை முடிந்து கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவேண்டும் என்பதற்காக மணிகண்டனையும், சீராத்தோப்பு சுரேஷின் தாயார் கனகவள்ளி ஆகியோரையும் திருச்சி கோட்டை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தக் கொள்ளை வழக்கில் ஐபிசி பிரிவு 457 (வீடு, கட்டிடத்தை உடைத்து உள்ளே புகுந்து திருடுவது), 380 ( நிறுவனங்களில் புகுந்து திருடுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.