

சென்னை
ஆயுத பூஜையை ஒட்டி சாலைகளில் பூசணிக்காயை உடைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மீறி விபத்து ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டி பூசணிக்காய்கள் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பல சமயங்களில், சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டுச் செல்வதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இவ்வாறு விழும்போது பின்னால் வரும் வாகனங்கள் அவர்கள் மீது மோதி ஆபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக வெளியான அறிவிப்பில், ''சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் பொதுமக்கள் திருஷ்டி பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில் தங்களது பூஜைகளைச் செய்ய வேண்டும்.
திருஷ்டி பூசணிக்காய்களை சாலைகளில் உடைத்து அதனால் விபத்து ஏற்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கி , விபத்தில்லா ஆயுத பூஜை பண்டிகையைக் கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.