Published : 05 Oct 2019 02:14 PM
Last Updated : 05 Oct 2019 02:14 PM

தூத்துக்குடியில் சாலையில் பெட்ரோல் ஊற்றி பைக் எரிக்கப்பட்ட சம்பவம்: ஹெல்மெட் அபராதமா? குடும்பத் தகராறா?- நடந்தது என்ன?

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலீஸ் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் பைக் ஒன்று சாலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகும் சூழலில் அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அவருடைய பைக்கை அவரே பெட்ரோல் ஊற்றி எரித்து அதை வீடியோ எடுத்த பகிர்ந்ததௌம், மற்றொரு இளைஞர் அதனை சமூக வலைதளங்களில் வதந்தியாகப் பரப்பியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி பீங்கான் ஆபீஸ் சந்திப்பில் நேற்று மாலை 5 மாலையில் வேலு என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்தால் போலீஸார் அவருக்கு அபராதம் விதித்ததாக கூறி அவர் தனது பைக்கை நடுரோட்டில் நிறுத்தி தீயிட்டு எரித்ததாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி போலீஸுக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் வேலுமயில், நேற்று மதியம் குடும்பத்தகராறு காரணமாக தாமோதர் நகர் பிரதான சாலையில் தனது பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததும், அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் பைக்கில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டதும் தெரியவந்தது.

இந்த வீடியோவை வேலுமணி சமூகவலைதளங்களிப் பகிர அதனை ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரரான அருண் விஜய் காந்தி அதை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதைப் பகிர்ந்ததோடு நில்லாமல், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அந்த வீடியோவைப் பரப்பியுள்ளார். கூடவே ஹெல்மெட் அணியாத நபரிடம் போலீஸார் கூடுதல் அபராதம் வசூலிக்க முயன்றதால் ஆத்திரத்தில் இளைஞர் பைக்குக்கு தீ வைத்தார் எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகவே ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

சமூக ஆர்வலர் கைது:

இந்நிலையில் அழகேசபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அருண் விஜய்காந்தி (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக ஆர்வலரான இவர் மீது வாட்ஸ் அப்பில் காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் சமூக வலைதளங்களில் பரப்பிய அவதூறு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வீடியோவையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.

இது குறித்து தூத்துக்குடி போலீஸார், "வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் வேலு, அந்த வாகனத்தை எரித்தார். அவரைத் தேடி வருகிறோம்.

போலீஸார் மீது அவதூறு பரப்பிய அருண் விஜய் காந்தி என்ற இளைஞரை கைது செய்துள்ளோம். அவர் மீது சமூகவலைதளங்களில் பீதியை உருவாக்கும் செய்தியைப் பகிர்தல், அரசுக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினர்.

எஸ்.கோமதிவிநாயகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x