

நாமக்கல்
தினசரி குடித்து விட்டு தன்னை அடித்து துன்புறுத்திய கணவரை கொலை செய்ய உதவிய ஆண் நண்பர் பின்னர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மனைவி வேறு வழியில்லாமல் போலீஸில் சரணடைந்து நண்பரை காட்டிக்கொடுத்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஏரி தெரு பகுதியில் வசித்தவர் வெங்கடேசன்(38). இவரது மனைவி செல்வி(34). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. வெங்கடேசன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். மது போதையில் மனைவி செல்வியை தினமும் அடித்து துன்புறுத்துவார்.
குடும்ப செலவிற்காக செல்வி விசைத்தறி கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுள்ளார் . அங்கு அவருடன் பணியாற்றும் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (30)என்பவருக்கும் செல்விக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. செல்வி சில நேரம் கவலையாக இருப்பதை பார்த்து அவரது கஷ்டத்தைக்கேட்டு பெருமாள் ஆறுதல் கூறியுள்ளார். தனது கணவன் வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை துன்புறுத்துவது குறித்து செல்வி பெருமாளிடம் கூறி அழுதுள்ளார்.
அவருக்கு பெருமாள் ஆறுதல் கூறி கணவனை ஒரேடியாக முடித்துவிடவா என்று கேட்டுள்ளார். அதற்கு செல்வி துன்பத்திலிருந்து விடுபட்டால்போதும் என அரைகுறை மனதுடன் சம்மதிக்க இரண்டு மூன்று முறை நேரில் பார்த்து பேசிய பழக்கத்தில் கடந்த 8-ம் தேதி இரவு வெங்கடேசனை சந்தித்த பெருமாள் மது அருந்த அழைத்துள்ளார். பெருமாளுடன் சென்ற வெங்கடேசுக்கு அளவுக்கதிகமாக மது வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் வெங்கடேஷ் மதுபோதையில் இருந்த வெங்கடேசை காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்று பாலத்திற்கு அழைத்து சென்று அவரை ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கணவன் காணாமல் போனதாக செல்வி அக்கம் பக்கத்தில் சொல்லியிருந்த நிலையில் கொலை செய்த விஷயம் செல்வி, பெருமாள் இருவருக்கு மட்டுமே தெரிந்த நிலையில் சில நாட்கள் கழித்து பெருமாள் தனது சுய ரூபத்தை காட்டியுள்ளார். கணவரை கொன்ற விஷயத்தை வெளியே சொல்லி உன்னை சிக்க வைத்துவிடுவேன் என மிரட்டி செல்வியை பலாத்காரப்படுத்தியுள்ளார்.
வேறு வழியில்லாமல் பயத்தினால் சகித்துக்கொண்ட செல்வி போகப்போக கணவர் வெங்கடேசனைவிட மோசமான ஆணாக பெருமாள் இருப்பதை கண்டு இதற்குமேலும் பொறுமை காத்தால் சரியாக இருக்காது என்று முடிவு செய்துள்ளார்.
பிளாக்மெயில் செய்து தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பெருமாள் துன்புறுத்தியதால் வேறு வழியின்ரி காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது துயரத்துக்கு முடிவுக்கட்ட கணவனை கொல்ல சம்மதித்தேன் , ஆனால் இன்னொரு துயரம் தொடர்கிறது என அனைத்தையும் சொல்லி சரணடைந்தார்.
வெங்கடேசனை கொன்றது, செல்வியை பலாத்காரப்படுத்தியது என பெருமாள்மீது பல வழக்குகள் பாய்ந்த நிலையில் பெருமாள் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காவிரி ஆற்றில் வெங்கடேஷ் தள்ளி விடப்பட்ட பகுதிகளில் அவரது சடலம் உள்ளதா? அல்லது வேறு எங்கேனும் சடலம் ஒதுங்கி அனாதை பிணமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதா? என பக்கத்து ஊர் காவல் நிலையங்களுக்கு போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.
விவாகரத்து கேட்டுத் தனியாக வாழ்த்து காட்ட வேண்டிய பெண் தவறான நட்பால் சிறைக்குச் செல்ல இரண்டு குழந்தைகள் இப்போது தாய், தந்தை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.