Published : 04 Oct 2019 11:52 am

Updated : 05 Oct 2019 11:20 am

 

Published : 04 Oct 2019 11:52 AM
Last Updated : 05 Oct 2019 11:20 AM

திருச்சி நகைக்கொள்ளையின் மூளை; தென்னிந்தியாவின் திகில் கொள்ளையன் முருகன் யார்?- முழுமையான பின்னணி

trichy-jeweler-s-brain-south-indian-horror-bandit-murugan-interesting-information

சென்னை

திருச்சி நகைக் கொள்ளையில் சிக்கிய கொள்ளையர்கள் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள நகை, பணத்தைக் கொள்ளை அடித்து பவாரிய கொள்ளையன்போல் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு இதுவரை போலீஸாரிடம் சிக்காத முருகன் குறித்து நமக்குக் கிடைத்த தகவல்கள்.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரம்மாண்டமான மூன்றடுக்கு நகை மாளிகை லலிதா ஜுவல்லரி. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அந்த நகைக் கடையில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் கீழ்தளத்தில் உள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு மிக நிதானமாக அங்குலம், அங்குலமாக நகை ரேக்குகளைத் திறந்து நகைகளை எடுத்து பையில் போடும் காட்சி கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும்கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையில் வடமாநிலக் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் கருதினர். அதை நோக்கி விசாரணை நகர்ந்த நிலையில் நேற்று நடந்த வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே மடப்புரம் மணிகண்டன் என்பவர் சிக்கினார்.

மணிகண்டன்

அவருடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் என்பவர் தலைமறைவானார். அவர்களிடமிருந்து 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. சீராத்தோப்பு சுரேஷ் குறித்த தகவல்களை போலீஸார் விசாரித்தபோது அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி மற்றும் உறவினர் என்பது தெரியவந்தது.

தப்பி ஓடிய சீராத்தோப்பு சுரேஷ்

யார் இந்த முருகன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. தென்னிந்தியா முழுதும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு இதுவரை சிக்காத கொள்ளையன் முருகன் என்பது தெரியவந்தது.

யார் இந்த திருவாரூர் முருகன்?

முருகன் என்ற பெயரைக் கேட்டாலே தென்மாநில போலீஸாருக்கு எல்லாம் சிம்ம சொப்பனம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு முழுவதும் முருகன் கூட்டாளிகளுடன் அரங்கேற்றிய கொள்ளைகள் நூறு கோடி ரூபாயைத் தாண்டும். கர்நாடகாவில் ஒரு முறை சிக்கிய முருகன் அதன்பின்னர் இதுவரை சிக்கவே இல்லை. தமிழக போலீஸார் தனிப்படை அமைத்து 50 முறைக்கு மேல் முருகனைப் பிடிக்க படையெடுத்தும் முடியவில்லை.

கொள்ளையடிக்கும் பொருளில் பலருக்கும் உதவுவது, கொள்ளை முடிந்து அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் பலர் கஷ்டத்தைத் தீர்ப்பது என முருகன் சீராத்தோப்பு வள்ளலாக வலம் வருவதாக சிலர் கூறுகின்றனர்.

கொள்ளையடிக்கும் பணத்தில் சீராத்தோப்பில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்க, பின்னர் அதிகாரிகள் தலையிட்டு அதை மூட வைத்தனர். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி சிறுவர்கள் சிலரை வளர்த்து வருகிறார் முருகன். தப்பி ஓடிய சுரேஷ், முருகனின் உறவினர். முருகனின் முக்கிய வலதுகரமாக தினகரன் என்பவர் செயல்படுகிறார்.

சென்னை அண்ணா நகர் கொள்ளையில் சிக்கிய மணிகண்டன்

கடந்த ஆண்டு சில மாதங்களாக அண்ணா நகர் பகுதியில் 19-க்கும் மேற்பட்ட தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை குறித்த விசாரணையில் போலீஸார் குறிப்பிட்ட நகர்வுக்கு மேல் செல்ல முடியாத அளவுக்கு சாமர்த்தியமாகச் செயல்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி, கொள்ளையர்களைப் பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் 9 குற்றவாளிகள் இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர்.

கொள்ளையர்கள் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள். இதில் போலீஸாரின் தீவிர தேடுதலில் மணிகண்டன், ரகு, மூர்த்தி, கோபால் ஆகியோர் சிக்கினர்.

போலீஸாரின் தொடர் தேடுதலில் 4 மாதங்களுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான தினகரன் (31) மற்றும் அவருக்கு உதவிய கூட்டாளிகள் லோகநாதன், காளிதாஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கைதான தினகரனிடமிருந்து 3 கிலோ தங்கக்கட்டிகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 1000 அமெரிக்க டாலர்கள், ஒரு சொகுசுக் கார், 3 வாக்கி டாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர்.

இதில் பிடிபட்ட தினகரன்தான் முக்கியக் குற்றவாளி. இவரும் திருவாரூர் முருகனும் கூட்டாளிகள், இவர்கள் மீது நான்கு மாநிலங்களிலும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த வழக்குகள் உள்ளன. இந்த வழக்கிலும் திருவாரூர் முருகன் உட்பட இருவர் சிக்கவில்லை.

சென்னை அண்ணா நகர் கொள்ளையிலும் பிடிபடாத திருவாரூர் முருகன்

இவர்கள் கடைசியாக வெளிப்பட்டது கடந்த ஆண்டு அண்ணா நகரில் பெரிய அளவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில். இதில்தான் முருகன் குறித்தும் அவரது கும்பல் குறித்தும் தகவல் வெளியானது. நவீன முறையில் வாக்கி டாக்கி உதவியுடன் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபடுவது இவர்கள் வழக்கம். இவர்கள் பெயரே வாக்கி டாக்கி கொள்ளையர்கள் என்பார்கள்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளைக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இதில் முக்கியக் குற்றவாளி திருவாரூர் முருகன். இவரது கூட்டாளிகள் தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் கிலோ கணக்கில் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆந்திராவில் கொள்ளையடித்தால், கேரளாவுக்குத் தப்பிச் செல்வது, கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு தமிழகம் தப்பி வருவது என்று நான்கு மாநில போலீஸாருக்கு தண்ணீர் காட்டும் இவர்களில் முருகன் மட்டும் இதுவரை சிக்கியதே இல்லை.

எப்படித் திருடுகிறார்கள்?

திருவாரூர் முருகன்தான் மூளையாகச் செயல்படும் தலைவன். தினகரன் முக்கிய வலது கரம். இவர்கள் தெளிவாக போலீஸாரைத் திட்டமிட்டு ஏமாற்றி, கொள்ளையடித்து தப்பித்து வந்துள்ளனர். ஒரு ஏரியாவைத் தேர்வு செய்தால் அங்கு பகலில் போலீஸார் போல் ரோந்து வருவார்கள்.

பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் இவர்கள் அந்த வீட்டில் பூட்டுக்கு இடையே விளம்பரம் செய்யும் நோட்டீஸ் அல்லது ஏதாவது பேப்பரைச் செருகிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆட்கள் இருக்கும் வீடுகள் என்றால் பூட்டைத் திறப்பவர்கள் பேப்பரைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். அப்படி பேப்பர் இல்லாத வீடுகள் பக்கம் செல்லவே மாட்டார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் பேப்பர் எடுக்கப்படாமல் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். திருடுவதற்கென்று தனியாக உபகரணம் ஒன்றைத் தயாரித்து வைத்துள்ளார்கள். அதைக் காட்டினால் மற்ற கொள்ளையர்கள் பிரதி எடுத்துவிட வாய்ப்புண்டு என்பதால் போலீஸார் அதைத் தவிர்த்துவிட்டனர்.

அந்தக் கருவியால் பூட்டை எளிதில் உடைக்கவும், மரக்கதவுகளைப் பெயர்த்து லாக்குகளை உடைக்கவும் முடியும். அந்தக் கருவியைப் பயன்படுத்தி இரவில் தங்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். சொகுசுக் காரில் வலம் வந்து இரவில் இவர்கள் கொள்ளை அடிப்பதால் யாரும் சந்தேகப்படவில்லை.

தங்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற எவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் கயிறு வீசி ஏறி உள்ளே இறங்கவும் தயாராக பிரத்யேகக் கயிறுகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுவரைத் துளையிடக் கருவிகளும் வைத்திருப்பார்கள். இதற்காகப் பயிற்சியும் எடுத்துள்ளனர். கொள்ளை அடிக்கும் சமயம் வேவு பார்க்க, உள்ளே பல அறைகளில் கொள்ளை அடிக்கும் இருவர் என மூன்று பேர் ஆளுக்கொரு வாக்கி டாக்கியுடன் களத்தில் இறங்குவார்கள். கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்த மாட்டார்கள்.

வெளியே நிற்பவர் வெளியில் உள்ள நிலையை வாக்கி டாக்கியில் அவ்வப்போது தெரிவிப்பார். தேவையான உதவிகள் செய்வார். உள்ளே திருடச் செல்பவர்கள் தங்களுக்குள்ளும் வாக்கி டாக்கியில் பேசிக்கொள்வார்கள். இதனால் கொள்ளை நடந்த பின்னர் போலீஸார் அப்பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை எடுத்தாலும் இவர்கள் சிக்காமல் இருந்தனர்.

போலீஸார் கொள்ளையர்களைப் பிடிக்க தங்களுக்குள் வாக்கி டாக்கி கருவியைப் பயன்படுத்துவார்கள். ஆனால், கொள்ளையர்கள் தங்களுக்குள் வாக்கி டாக்கியைப் பயன்படுத்தி ஓவர் நைட்டில் பல தொழிலதிபர்களின் தங்கம், லட்சக்கணக்கில் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடித்த பின்னர் லோகநாதன், காளிதாஸ் போன்றவர்களிடம் தங்க நகைகளைக் கொடுத்துவிடுவார்கள். ரொக்கப் பணத்தை வைத்து ஜாலியாக அண்டை மாநிலங்களுக்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள். நகைகளை வாங்கிய புரோக்கர்கள் லோகநாதன், காளிதாஸ் அதை உருக்கி விற்று காசாக்குவார்கள்.

அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை கொள்ளையர்கள் அக்கவுண்ட்டில் போட்டுவிடுவார்கள். இதுதான் இவர்கள் ஸ்டைல். திருச்சி கொள்ளையிலும் போலீஸார் அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல முடியாத காரணம் இதே பாணியில் நடந்ததுதான். ஆனால் இங்கு வாக்கி டாக்கி பயன்படுத்தினால் சிக்குவோம் என்பதால் காலில் கயிற்றைக்கட்டிக் கொண்டு சிக்னல் கொடுக்கும் முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.

முருகனின் தனித்திறமை

முருகன் எங்கு கொள்ளையடிக்கச் சென்றாலும் விடுதிகளில் தங்க மாட்டார். காரில்தான் அத்தனை கும்பலும் தங்கும். சமையல் பொருட்கள், சிலிண்டர் உபகரணங்களுடன் சுற்றுலா செல்வதுபோன்று செல்வது இவர்கள் வழக்கம். அதனால் போலீஸாரும் சுற்றுலா வந்த குடும்பம் என சந்தேகப்பட மாட்டார்களாம்.

இன்னும் சில இடங்களில் தனது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வது போன்று அழைத்துச் செல்வாராம். கொள்ளையடிக்கும் இடம் எப்படி அடிப்பது என திட்டம் போட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவாராம். மறந்தும் யாரும் செல்போனைப் பயன்படுத்த மாட்டார்கள், இதனால்தான் திருச்சி கொள்ளையில் போலீஸார் அதிகம் திணறும் நிலை ஏற்பட்டது.

திருடும் இடத்தில் வாக்கி டாக்கியைப் பயன்படுத்தி திருடி முடித்தபின் அனைவரும் பல கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற பின்னர் செல்போனில் பேசும் முருகன் எப்படி பங்கு பிரிப்பது என உத்தரவிட்ட பிறகு செல்போனை அணைத்து விடுவாராம். நகைகள் புரோக்கர்களிடம் போய்விடும். புரோக்கர்கள் விற்று பணத்தை வங்கியில் போட்டுவிடுவார்கள். அவரவர் பங்கு அவரவருக்குப் போய் விடுமாம்.

இதுபோன்ற பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் முருகன் இதுவரை தமிழக போலீஸாரிடம் சிக்கவில்லை. அண்ணா நகர் தொடர் கொள்ளையில் தனிப்படையினர் 50 முறைக்குமேல் திருவாரூர் சென்றும் முருகன் அவர்கள் கையில் சிக்கவில்லை. தற்போது அந்த தனிப்படையும் கலைக்கப்பட்டதாக தகவல்.

இந்த கொள்ளை மூலம் முருகன் அவரது கூட்டாளிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர். இந்தக் கொள்ளையில் முருகன் சிக்குவாரா என்பதே தற்போதுள்ள கேள்வி?

Trichy jeweler's robberyBrainSouth IndianHorror BanditThiruvarur MuruganInteresting Informationதிருச்சி நகைக்கொள்ளைமூளைதென் இந்தியாவின் திகில் கொள்ளையன்முருகன்சுவாரஸ்ய தகவல்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x