தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை செய்த பள்ளி ஆசிரியர் கைது: 72 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை செய்த பள்ளி ஆசிரியர் கைது: 72 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்
Updated on
1 min read

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி தினத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை காரில் வைத்து விற்பனை செய்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 72 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நேற்று மூடப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சட்டவிரோதமாக ஏங்கேனும் மது விற்பனை நடைபெறுகிறதா என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் மீஹா தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடி அண்ணாநகர் 8-வது தெரு சந்திப்பு பகுதியில் காரில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக ஒருவர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸார் அங்கு விரைந்து சென்று, காரில் வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அண்ணாநகர் 8-வது தெருவை சேர்ந்த வாலையன் மகன் பூசைதுரை (44) என்பரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 72 மதுபான பாட்டில்கள் மற்றும் மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டவை என தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள பூசைதுரை தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஆசிரியர் சங்கம் ஒன்றில் மாவட்ட நிர்வாகியாக இருந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

காந்தி ஜெயந்தி அன்று பள்ளி ஆசிரியர் ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த சம்பவம் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in