Last Updated : 03 Oct, 2019 11:47 AM

 

Published : 03 Oct 2019 11:47 AM
Last Updated : 03 Oct 2019 11:47 AM

வங்கிகள், நகைக்கடைகள், பூட்டிய வீடுகளில் கொள்ளைகளைத் தடுக்க குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கும் 'நவீன அலாரம்': மதுரை இளைஞர் கண்டுபிடிப்பு

மதுரை

தமிழகத்தின் இன்றைய பரபரப்பு குற்றச் செய்தி திருச்சியில் பிரபல நகைக்கடையில் நடந்த துணிகர கொள்ளை. இந்த கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நேரத்தில்தான் மதுரையில் இளைஞர் ஒருவர் வங்கி, நகைக்கடைகள், பூட்டிய வீடுகளில் கொள்ளைகளைத் தடுக்க குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கும் 'நவீன அலாரம்' ஒன்றை கண்டுபிடித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வங்கி, வீடு, வர்த்தக நிறுவனங்களில் கொள்ளையைத் தடுக்க, குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கும் நவீன அலாரம் கருவி ஒன்றை அந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களைத் தடுக்க, சிசிடிவி கேமரா போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர். ஆனாலும், தொடரும் கொள்ளை சம்பவங்கள் போலீஸாருக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

பூட்டிய வீடுகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க போலீஸ் தயாராக இருந்தும், பொது மக்கள் ஒத்துழைப்பு பெரியளவில் இல்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கெனவே வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்கள், அடகுக் கடைகளில் கொள்ளையைத் தடுக்க, பணம், நகைப் பெட்டகங்களில் எச்சரிக்கை அலாரங்கள் பொருத்துவது நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பெரிய கொள்ளைகளும் தடுக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சட்டம், ஒழுங்கு போன்ற குற்றச்செயல்களைத் தடுக்க, தற்போது, காவல் துறையினர் பெரிதும் நம்புவது சிசிடிவி கேமராக்களை மட்டுமே.

ஆனாலும், திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் திருச்சியில் ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் இதற்கு ஒரு சான்று. அத்தனை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும்கூட. அது ஒரு பொருட்டல்ல என்பதுபோல் கொள்ளையர்கள் முகமூடியை அணிந்துகொண்டு துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தவுடனேயே எச்சரிக்கும் அலாரம் ஒன்றை கண்டுபிடித்துள்ள மதுரை டிவிஎஸ். நகரைச் சேர்ந்த பாண்டி (30), அது பற்றி விரிவாக விளக்கினார்.

இது குறித்த பாண்டி கூறுகையில், "கடந்த 2000-ல் தனியார் பாடலிடெக்னிக்கில் டிப்ளமோ எலட்ரிக்கல், எலட்ரானிக்ஸ் படித்தேன். வெளிநாட்டில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

அன்றாடம் நாளிதழ், டிவிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களை பார்த்தபோது சிசிடிவி போன்ற தொழில்நுட்பங்கள் இருந்தும், திருட்டு, கொள்ளைகளை குறைக்க முடியவில்லையே என்று தோன்றியது.

இதன் விளைவாக ‘ திருட்டு தடுப்பு முன் எச்சரிக்கை நவீன கருவி ’ ( ஏடிஏஎஸ்- ஆன்டி தெஃப்ட் அலாரம் சிஸ்டம் ) கண்டறிந்தேன். சுமார் ஒரு அடிநீளமுள்ள இக்கருவியில் சிவவிளக்கு, சத்தமிடும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை பெட்டகத்தில் பொருத்திவிட்டால் திருடர்கள் குற்றச்செயலில் ஈடுபட முயலும்போது, பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிக ஒலி எழும்பும். மேலும், அருகில் உள்ள காவல் நிலையம், சம்பந்தப்பட்ட நபருக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். மின் விளக்குகளை எரியச் செய்து, எச்சரிக்கை அலாரம் அடிக்கும்.

கொள்ளையர்கள் சம்பவ இடத்துக்குள் எந்த திசையில் வந்தாலும் எச்சரிக்கும். செல்போனுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) செல்லும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருடன் உள்ளே நுழைந்தவுடன் அலாரம் அடிப்பதுடன் பிற மின் விளக்குகளையும் எரியச் செய்யலாம். கருவிக்கான இணைப்பைப் பெற்றவர்களே அக்கருவியை ‘ டிஆக்டிவ்வேட்’ செய்ய முடியும்.

வங்கி, வர்த்தக நிறுவனங்களில் இது போன்ற கருவிகளை பொருத்தினால் நள்ளிரவில் குற்றச்செயல்களை காவல் நிலையம் மூலம் தடுக்கலாம். இக்கருவியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டுமெனில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக மதுரை காவல் ஆணையரிடம் ஒத்திகை நிகழ்த்தி காண்பித்தேன். அனுமதி கிடைத்த பிறகு விரும்புவோர் வீடு, வர்த்தக நிறுவனத்தில் பொருத்த திட்டமிட்டுள்ளேன். இதற்கான செலவு ரூ. 50 ஆயிரம் வரை ஆகும். இதன்மூலம் வங்கி, பூட்டிய வீடு, வர்த்தக நிறுவனங்களில் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என, நம்புகிறேன், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x