

நெல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் வயதான தம்பதியை ஆயுதங்களுடன் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் 50 நாட்களுக்குப் பின்னர் முக்கியக் குற்றவாளி சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமார் இன்று பகல் 12 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் வசிப்பவர் சண்முகவேல், இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். தனது ஓய்வுக்காலத்தில் தங்கள் சொந்த ஊரின் தோட்டத்து வீட்டில் தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் தங்களது பண்ணை வீட்டில் இருந்தனர். வீட்டின் வெளியே சண்முகவேல் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வீட்டிற்கு முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த 2 கொள்ளையர்களில் ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சண்முகவேலின் பின்பக்கமாக வந்து கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கினான். இதனால் சத்தம்போட்டப்படி அவர்களுடன் சண்முகவேல் போராடினார். தன்னை வெட்டவந்த மற்றொரு கொள்ளையனை துணிச்சலாக எட்டி உதைத்தார்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த சண்முகவேலின் மனைவி செந்தாமரை தீரத்துடன் செயல்பட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையர்களை நோக்கி சத்தமிட்டப்படி வீசினார். இதனால் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கிய கொள்ளையன் பிடியைவிட அதிலிருந்து மீண்ட சண்முகவேல் பக்கத்திலிருந்த நாற்காலியை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினார்.
அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து கொள்ளையர்களுடன் போராடினர். இருவர் கையிலும் வீச்சரிவாள் இருந்தும் அஞ்சாமல் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் காப்பாற்றும்விதமாகப் போராடினர். ஒருகட்டத்தில் அருகில் சென்று கொள்ளையனைத் தாக்கிய செந்தாமரையின் மீது கோபம் கொண்ட கொள்ளையன் அரிவாளால் அவரை வெட்ட அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி கழுத்திலிருந்த தாலிச் சங்கிலியைப் பறித்தனர். விடாமல் தம்பதிகள் தீரத்துடன் போராடுவதைப் பார்த்து பயந்துபோன அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இவை அனைத்தும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சி தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் வைரலானது. தம்பதியின் வீரத்தை பிரபலங்களும் பாராட்டினர். நெல்லை எஸ்பி நேரில் சென்று தம்பதியைப் பாராட்டினார். நெல்லை தம்பதிக்கு தமிழக அரசின் வீரதீரச் செயலுக்கான விருது வழங்கப்பட்டது.
50 நாட்களுக்குப் பின்னர்..
ஆனால், நெல்லை தம்பதி வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது. இதனால் நெல்லை போலீஸாருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. உறவினர்களையும் விட்டுவைக்காமல் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக 50 நாட்களுக்குப் பின்னர் முக்கியக் குற்றவாளி ஒருவர் கைதானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடையம் காவல் நிலையத்தில் குற்றவாளி இருப்பதாகவும் பகல் 12 மணியளவில் மாவட்ட எஸ்.பி. செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.