சிறையில் முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக கைதி மிரட்டப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

சிறையில் முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக கைதி மிரட்டப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை

சிறையில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக ஆயுள் தண்டனை கைதி மிரட்டப்பட்டது குறித்து புழல் சிறைத் துறை நிர்வாகம் 2 வாரத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புழல் மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்படுவது வழக்கம். புதிதாக பயன்படுத்தப்படும் காலணிகளுக்கு பாலிஷ் செய்யும் பணிக்கான கூலி 49 பைசாவில் இருந்து 89 பைசாவாக உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து பழைய கூலியான 49 பைசா மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியான பாண்டியன் என்பவரின் மனைவி ஸ்டெல்லா மேரி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சிறைக்குள் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி புழல் சிறைத்துறை பொது தகவல் அதிகாரிக்கு மனு அளித்திருந்தார்.

ஆட்கொணர்வு மனு

இந்த மனுவுக்கு இதுவரை சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்காத நிலையில், தனது கணவரான பாண்டியனை வேறு சிறைக்கு மாற்றப்போவதாக சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மிரட்டி வருவதாக கூறி ஸ்டெல்லா மேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தான் அனுப்பிய மனுவை திரும்பப் பெறாவிட்டால், தன் கணவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி வேறு சிறைக்கு மாற்றி விடுவதாக சிறை கண்காணிப்பாளர் மிரட்டி வருவதாகவும் எனவே எனது கணவரை புழல் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் ஸ்டெல்லா மேரி கோரியிருந்தார்.

அக்.16-ம் தேதிக்குள்..

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக புழல் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வரும் அக்.16-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in