திருச்சி நகைக்கடையில் ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை: ஹாலிவுட் சினிமா பாணியில் திட்டமிட்டுத் துணிகரம்

படங்கள் : திருச்சி ஞானவேல் முருகன்
படங்கள் : திருச்சி ஞானவேல் முருகன்
Updated on
5 min read

திருச்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் ஹாலிவுட் பாணியில் சுவரில் துளையிட்டு, சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றள்ளனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பரபரப்பான இடத்தில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி. திருச்சி நகரத்தின் மிகப் பிரபலமான பெரிய நகைக் கடை இது. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான இந்த நகைக் கடைக்கு திருச்சி நகரம் முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.

இதனால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள், காவலாளிகள், கண்காணிப்பு கேமராக்கள் என எந்நேரமும் பரபரப்பாக இருக்கும். பாதுகாப்பு வசதிக்கும் பஞ்சமிருக்காது. இரவு 11 மணி வரை விற்பனை இருக்கும், மீண்டும் காலை 9 மணிக்கு கடையைத் திறப்பார்கள். 24 மணி நேரமும் கடையைச் சுற்றி பாதுகாப்புக்கு காவலாளிகள் இருப்பது வழக்கம். நேற்றிரவு வழக்கம்போல் விற்பனை முடிந்து நகைக் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் வெளியில் சென்றனர்.

காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது கீழ்தளத்தில் பெரிய அளவில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. கீழ்தளத்தில் நகைகளில் ஒரு குண்டுமணி அளவுக்குக் கூட விட்டு வைக்காமல் அனைத்து தங்க, வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக் கடை ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். நகைக்கடையின் மேல்தளத்தில் உள்ள நகைகள் எதையும் கொள்ளையடிக்காத கொள்ளையர்கள், கீழ்தளத்தில் உள்ள நூறு கிலோ அளவிலான தங்க வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.50 கோடிக்கும் மேலிருக்கும் எனத் தெரிகிறது.

சம்பவ இடத்துக்கு மத்திய மண்டல ஐஜி வரதராஜ், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரி கட்டிடம் மிகப்பெரியதாகும், அப்பகுதியில் லலிதா ஜுவல்லரி கட்டிடம் தனியாக அமைந்துள்ளது. கட்டிடத்தின் வலது புறத்தில் லலிதா ஜுவல்லரி வாடிக்கையாளர்களுக்கான கார் பார்க்கிங் உள்ளது.

பின்புறம் ஏசி மெஷின்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆள் நடமாட்டம் பகலிலேயே இருக்காது. கொள்ளையர்கள் இந்தப் பகுதி வழியாக ஏசி மெஷின்கள் இருக்கும் சுவர் வழியாகத் துளையிட்டு உள்ளே புகுந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தெரிந்துள்ளது. 2 அடி தடிமனான சுவரில் துளையிட்டுள்ளனர்.

நெடுநாட்களாகத் திட்டம் போட்டு படிப்படியாகக் கணக்கிட்டு சுவரில் துளையிட்டுக் கொள்ளையர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ஒரு ஆள் நுழையும் அளவிற்கு சுவரில் பெரிதாகத் துளையிட்டு அதன் வழியாக இரண்டு நபர்கள் உள்ளே சென்று அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. கட்டிடத்தைச் சுற்றி பரபரப்பாக இருக்கும். 24 மணிநேரமும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பர்.

கட்டிடத்தைச் சுற்றி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் பல கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. ஆனால் அவர்கள் ஹாலிவுட் சினிமா பாணியில் தங்கள் உருவம் தெரியாமல் இருக்க, முழுவதும் மூடிய உடையும், கைகளில் கையுறையும், முகத்தில் விலங்குகள் உருவம் பதித்த முகமூடியும் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 2 கொள்ளையர்கள் நகைக் கடையில் அங்குமிங்கும் நடந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது.

அதிகாலை 2.11 க்கு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 3.15 மணி வரை உள்ளே இருந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் கட்டிடத்துக்குள் இருந்தது தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த பின் வந்த வழியாக வெளியேறி அவர்கள் சென்றுள்ளனர்.

வெளியில் செல்லும் போது தங்களை மோப்ப நாய்கள் எதுவும் மோப்பம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக வழியெங்கிலும் மிளகாய் பொடியைத் தூவி விட்டுச் சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் தடயவியல் நிபுணர்கள் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைக்கடையில் கொள்ளை அடித்துச் சென்ற கொள்ளையர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கொள்ளையடித்த நபர்களில் முகமூடி போட்ட இருவர் உருவம் மட்டுமே பதிவாகியுள்ளது. கொள்ளையில் எத்தனை பேர் பங்கு பெற்றுள்ளனர் என்பது குறித்தும் தகவல் இல்லை. நகைக் கடைக்குள் இரண்டு பேர் மட்டுமே உள்ள நிலையில் இரண்டு பேர் மட்டுமே இத்தகைய செயலில் ஈடுபட முடியாது என போலீஸார் கருதுகின்றனர்.

100 கிலோ வரை நகைகளைக் கொண்டுசெல்வது இரண்டு பேரால் இயலாத காரியம். மேலும் கொள்ளைச் சம்பவத்திற்கு முன் சுவரில் பெரிய அளவில் துளை ஒன்று போடப்பட்டுள்ளது. இது உடனடியாக இந்த வேலையை ஒரே இரவில் செய்ய வாய்ப்பில்லை. காரணம் கட்டிடத்தின் முன்புறம் பத்துக்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் காவலுக்கு இருந்துள்ளனர். 2 அடி கனமுள்ள சுவரில் துளையிடுவதற்கான கருவிகளும், துளையிட எடுத்துக்கொள்ளப்படும் நேரமும், துளையிடும்போது வரும் சத்தமும் கொள்ளையர்களைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இது ஒரு இரவில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல என போலீஸார் கருதுகின்றனர்.

திட்டம் போட்டு படிப்படியாக நகைக் கடையை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து சில நபர்கள் செய்துள்ள கொள்ளை எனத் தெரியவருகிறது. நகைக் கடையைக் கொள்ளையடிக்கும் முன் பல நாட்கள் நகைக் கடைக்கு உள்ளே வந்து, வெளியிலிருந்து உள்ளே வருவதற்கான எளிதான வழிகள் என்ன என்பதை ஒரு குழுவாக இருந்து ஆராய்ந்து திட்டம் போட்டு ஹாலிவுட் சினிமா பாணியில் இந்த கொள்ளைச் சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர் என போலீஸார் கருதுகின்றனர்.

கொள்ளையர்கள் உள்ளே வருவதற்கு நேரடியான வழி இல்லை என்பதாலும், மேலிருந்து மொட்டை மாடி வழியாக வர முடியாது என்பதாலும் அவர்கள் எளிதாக உள்ளே நுழைவதற்கான வழியை பல நாட்கள் நோட்டமிட்டு தேர்ந்தெடுத்துள்ளனர். கட்டிடத்தின் பக்கவாட்டில் உள்ள பகுதியில் காவலாளிகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதாலும், ஏசி மெஷின் உள்ள பகுதியில் ஊழியர்களும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அப்பகுதியில் பல நாட்கள் துளையிடும் வேலையைச் செய்து அப்பகுதியை மூடி வைத்து, பின் கொள்ளை அடித்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் கடையின் ஊழியர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்பதை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். காரணம் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பல நாட்கள் திட்டம் போடுவதற்கும், நகைக் கடையின் வலுவிழந்த பகுதி எது என்பதற்கும், கொள்ளையடிப்பதற்காக நேரம் எது என்பதைத் தீர்மானிக்கவும் கடையைப் பற்றி நன்கு அறிந்தவர் உதவி வேண்டும்.

ஏசி உள்ள பகுதியில் பல நாட்கள் துளையிட்டு அது மற்றவர் பார்வைக்குத் தெரியாமல் இருப்பதற்கு, கடையில் உள்ள ஊழியர்கள் உதவி இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை என போலீஸார் கருதுகின்றனர். கொள்ளை அடித்த பின் கொள்ளையர்கள் எப்படித் தப்பிச் சென்றனர்? ஏதாவது வாகனத்தில் வந்தனரா? அல்லது வெளியில் சென்று வாடகை வாகனங்கள் எதையாவது பிடித்துச் சென்றனரா? அல்லது சொந்த வாகனத்தைப் பயன்படுத்தினரா? என போலீஸார் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகள் மற்றும் வாகன நிறுத்தங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்ற முறையில் தமிழகத்தில் வேறு எங்கும் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளதா என அதையும் வைத்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி அதை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முன் பல நாட்கள் நகைக் கடைக்குள் நுழைந்து நோட்டமிட்டு இருக்கலாம் எனக் கருதுவதால் பல நாட்களுக்கு முன் இருக்கும் சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரைக்கும் கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு சரியாக கணக்கிடப் பெறவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 100 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என முதல் தகவல் வெளியானது அவற்றின் மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.

திருச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுவரில் துளையிட்டு 800 சவரன் தங்க தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் எந்தவிதப் பொருட்களையும் கொள்ளையர்கள் விட்டுச் செல்லவில்லை. ஒரே ஒரு ஸ்க்ரூ டிரைவர் மட்டுமே கிடைத்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. வடமாநில கொள்ளையர்களுக்கு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in