

சென்னை
அரிவாளால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த நிலையில் திருவல்லிக்கேணியில் போலீஸாரிடம் சிக்கினார்.
ரவுடி பினு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையின் ரவுடிகளை திரட்டி தனது பிறந்தநாளை மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் ஆடம்பரமாக கொண்டாடினார். ரவுடிகள் புடைசூழ அரிவாளால் கேக் வெட்டும்போது போலீஸார் சுற்றி வளைக்க தப்பி ஓடினார். 75-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சிக்கினர்.
பின்னர் போலீஸ் என்கவுன்ட்டருக்கு பயந்து அதே மாதம் அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்து ‘நான் அவ்வளவு ஒர்த் இல்லீங்க’ என காணொலியில் பேட்டி கொடுத்தார். ஜாமீனில் வந்தவர் தலைமறைவானார். பின்னர் மீண்டும் போலீஸாரிடம் பிடிபட்டவர் மீண்டும் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்.
துப்பாக்கி விற்ற வழக்கில் மீண்டும் தேடிய போலீஸார் மீண்டும் அவரை கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். மீண்டும் ஜாமீனில் வெளிவந்தவர் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணியளவில் பினு(51) திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லறை பகுதிக்கு மறைந்த தனது மனைவி கிருஷ்ணவேணி என்பவரின் அக்கா, லட்சுமி @ அறுப்பு லட்சுமி(57) என்பவரைப் பார்க்க மதுபோதையில் வந்துள்ளார்.
அங்கு அவர் தகராறில் ஈடுபட போலீஸாருக்கு வந்த புகார் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் பினுவைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரைப்பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்கு கொண்டுவந்த போலீஸார் அங்கு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
நேற்று முன்தினம் பினுவின் முன்னாள் கூட்டாளியும் இந்நாள் எதிரியுமான ராதாகிருஷ்ணன் கோவையில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.