தலைமறைவாக இருந்த பிரபல தாதா அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் கைது; நடந்தது என்ன?

தலைமறைவாக இருந்த பிரபல தாதா அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் கைது; நடந்தது என்ன?

Published on

கோவை

சென்னையில் தாதாவாக வலம் வந்த ஏ.பிளஸ் ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கோவையில் வைத்து கைது செய்தனர்.

சென்னையில் ரவுடிகளாக வலம் வருபவர்கள் ஒருபக்கம் இருக்க, ரவுடிகளை வைத்துக்கொண்டு தாதாக்கள் வலம் வருவது வழக்கம். இவர்களுக்குக் கீழ் நூற்றுக்கணக்கில் ரவுடிகள் அடியாட்களாகச் செயல்படுவார்கள். தாதா மீது பல வழக்குகள் இருந்தாலும் அவர் பந்தாவாக வலம் வருவார். அரசியல் மற்றும் காவல் துறையிலேயே அவருக்கு தனியாக ஆட்கள் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட தாதாக்களில் பலர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாதாக்கள் தலையெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களைச் சிறையில் அடைத்தாலும் சிறைக்குள் இருந்துகொண்டே ஸ்கெட்ச் போட்டு ஆட்களை வைத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். மொத்தத்தில் இவர்கள் ராஜாங்கம் நிற்காது.

இப்படித் தலையெடுத்தவர்களில் சூளைமேடு பினுவும் ஒருவர். இவரது கூட்டாளிகள் விக்கி (எ) விக்னேஷ், நாகு (எ) நாகராஜ் , அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்(எ) ராதா (எ) ராதாகிருஷ்ணன்.

ரவுடி பினு உச்சத்தில் இருந்தபோது உடனிருந்த ராதாகிருஷ்ணன், பினு மீது பல வழக்குகள் வந்தவுடன் பினு ஜாகையை மாங்காடு பின்னர் புதுவை என மாற்றிக்கொண்டதும் ராதாகிருஷ்ணன் சென்னையில் பிரபலமானார். டாஸ்மாக் பார்கள், கட்டப்பஞ்சாயத்து, பிரச்சினைக்குரிய சொத்துகளில் தலையிடுவது, அரசியல்வாதிகளுக்கு உதவுவது என்று அவர் பெரிதாக வளர்ந்தார்.

இடையில் பினுவின் எதிரியான சி.டி.மணியுடன் கைகோத்த ராதாகிருஷ்ணன் பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார். பிறகு சி.டி மணி மீது நடந்த தாக்குதலில் ராதாகிருஷ்ணனின் பெயர் அடிபட்டது. இந்நிலையில் ரவுடி பினுவும் அவரது கூட்டாளிகளான விக்கி(எ) விக்னேஷ், நாகு (எ) நாகராஜ் உள்ளிட்டோரும் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனை முடிக்கத் திட்டம்போட்டனர். மலையம்பாக்கத்தில் பினுவின் பிறந்த நாளைக் கொண்டாட முடிவெடுத்து கூட்டம் போட்டபோது அதில் கலந்துகொள்ளச் சென்ற மதன் என்கிற ரவுடி, போலீஸ் வாகனச் சோதனையில் சிக்கி உளற, மொத்தமாக அனைவரையும் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

இதில் தப்பித்த ராதாகிருஷ்ணன் தலைமறைவானார். ஜாமீனில் வெளிவந்த பினுவும் தலைமறைவானார். பின்னர் அவரை என்கவுன்ட்டர் செய்யப்போவதாக வந்த தகவலை அடுத்து ஜனவரி மாதத்தில் பினுவும் அடுத்த மாதமே ராதாகிருஷ்ணனும் சரணடைந்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த இருவரில் , பினு கள்ளத்துப்பாக்கி வழக்கில் மீண்டும் கைதாக , ராதாகிருஷ்ணன் தலைமறைவாகவே இருந்து வந்தார்.

ஒன்பது கொலை வழக்குகள் உள்ளிட்ட 36 வழக்குகள் ராதாகிருஷ்ணன் மீது உள்ளதாகக் கூறப்படுகிறது. வடசென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவரான வியாசர்பாடி நகேந்திரன், தற்போது சிறையில் இருக்கிறார். இவருக்கு வலதுகரமாகச் செயல்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் மீது போலீஸ் தரப்பில் ஐயம் உண்டு. அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து மாதம் பல லட்ச ரூபாய் மாமூல் ராதாகிருஷ்ணனுக்கு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது தலைமறைவாக உள்ள ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ரவுடிகளைக் குறிவைத்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டிஜிபி திரிபாதியின் உத்தரவின்பேரில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுத்துறை (ஓசிஐயூ) போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதன் விளைவாக கோவையில் மறைந்திருந்த தாதா ராதாகிருஷ்ணனை நேற்று மதியம் கோவை ஓசிஐயூ போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரை போலீஸார் சென்னை கொண்டுவர உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in