

தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆக்கிரமிப்பு அகற்றிய ஆத்திரத்தில் கிராம உதவியாளரை வெட்டி கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் அடுத்த வெள்ளூரைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவர் திருவேகம்பத்தூர் கண்மாய் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அங்களான்கோட்டை கிராம மக்கள் புகார் அனுப்பினர்.
இதையடுத்து தேவகோட்டை தாசில்தார் மேசைதாஸ் உத்தரவின்படி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு திருவேகம்பத்தூரைச் சேர்ந்த கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் (50) தான் காரணம் என கணேசன் எண்ணினார்.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன் நேற்று(திங்கள்) மாலை திருவேகம்பத்தூர் காவல்நிலையம் அருகே ராதாகிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர்.