

சென்னை
பிரதமர் மீது தாக்குதல் நடத்த விருப்பதாக செல்போனில் மிரட்டல் விடுத்த நபரை திருவான்மியூர் போலீஸார் கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு செல் போன் அழைப்பு ஒன்று வந்துள் ளது. எதிர்முனையில் பேசியவர், ‘‘பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும்போது அவர் மீது தாக்குதல் நடத்த 2 பேர் திட்டமிட்டுள்ளனர்’’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித் தனர். அவர்கள் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என விசாரித்தனர். மிரட்டல் அழைப்பு திருவான்மியூரில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவான்மியூர் போலீ ஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் பெயர் திருநாவுக்கரசர் என்றும் அவர்தான் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது.
விசாரணையின்போது, ‘குடி போதையில் என்ன பேசினேன் என தெரியவில்லை’ என்றும் முன்னுக்குப் பின் முரணாகவும் கூறியுள்ளார். அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.