

சென்னை
ஆட்டோவை திருடி அதை வைத்து வாடகைக்கு ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த இளைஞரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.
சென்னை பூந்தமல்லி, ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(57), சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு, 100 அடி சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது ஆட்டோவை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஆட்டோ கிடைக்காததால் ஆட்டோ காணாமல் போனது குறித்து கோயம்பேடு போலீஸில் புகார் அளித்தார்.
ஆட்டோ திருடப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆட்டோ நம்பரை வைத்தும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை திருடிச் சென்ற நபர் யார்? என்பது குறித்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று கோயம்பேடு 100 அடி சாலையில் திருடு போன ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு இளைஞர் சவாரி சென்றது தெரியவந்தது. உடனடியாக அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸார் அந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.
ஆட்டோவை ஓட்டி சென்ற இளைஞரைப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பழைய வண்ணார பேட்டையில் வசிக்கும் முகமது பைரோஸ்(33), என்பதும், சவாரிக்கு ஆட்டோ இல்லாததால் ஒரு ஆட்டோவை திருடி அதை வைத்து சவாரி பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார் பைரோஸ் சொல்வது உண்மையா? அல்லது அவருக்கு பின்னால் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா? இதற்குமுன் ஆட்டோக்களை திருடியுள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.