

ஸ்ரீவில்லிபுத்தூர்
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாகக் கைதுசெய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு இருச்சக்கர வாகனத்தில் வந்திருந்தார்.
மன அழுத்தத்துக்காக அண்மையில் சிகிச்சை மேற்கொண்டிருந்த நிர்மலா தேவி, மீண்டும் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டு வந்திருந்தார்.
இன்றைய வழக்கு விசாரணைக்காக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜரான நிலையில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தால் விசாரணை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலயில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி இருச்சக்கர வாகனத்தில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அத்தோடு, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜரானார்கள்.
ஆனால், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக போராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அரசு வழக்கறிஞர் மட்டுமே ஆஜரானார். அதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.