Published : 27 Sep 2019 02:23 PM
Last Updated : 27 Sep 2019 02:23 PM

நீட் தேர்வு முறைகேடு: கேரளா கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது: மேலும் 5 மாணவர்கள் சிக்குகிறார்கள்?

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி கைதான மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை அளித்த தகவலின்பேரில் கேரள கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்த அந்த நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருப்பதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் டாக்டர் வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தார். இதுகுறித்து தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு இ-மெயில் மூலம் அசோக் கிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்தபோது மன உளைச்சல் என மாணவர் கல்லூரியைவிட்டு நின்றுவிட்டார். விவகாரம் பெரிதாகி கல்லூரி முதல்வர் போலீஸில் புகார் அளித்தார். உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீஸார், தேனி தனிப்படை போலீஸார் திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் உள்ளிட்டவர்களை பிடித்து சென்னை சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் தேனி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனது மகனை மருத்துவராக்க 2 முறை நீட் தேர்வு எழுதவைத்தும் தேர்வாகததால் குறுக்குவழியில் புனேயில் வேறு நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து நானே என் மகன் கைதாகும் நிலைக்கு தள்ளி வாழ்க்கையை அழித்துவிட்டேன் என தந்தை டாக்டர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.

தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வந்த வெங்கடேசன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் உதித்சூர்யா தேர்வெழுத உதவிய நபர் யார் என தெரிந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நீட் கோச்சிங் மையம் நடத்திவரும் ஜார்ஜ் ஜோசப் என்கிற நபர்மூலம் புனேவில் வேறொரு நபர்மூலம் தேர்வு எழுத வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட ஜார்ஜ் ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப்பை தமிழகம் கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

நீட் தேர்வில் உதித்சூர்யாவுடன் சேர்ந்து மேலும் 5 மாணவர்கள் இதேப்போன்று ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியதாகவும், அதில் ஒருவர் தேர்வாகவில்லை, மீதி 4 பேர் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர்களும் சிக்குவார்கள் என தெரிகிறது.

இதேப்போன்று வலைப்பின்னலாக நீட் தேர்வு முறைகேடு தொடர்ந்துள்ளது என தெரிகிறது, இந்த ஆண்டு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டுகளிலும் எத்தனைப்பேர் சேர்ந்துள்ளனர்?, வேறு புரோக்கர்கள் உள்ளனரா?, இந்த புரோக்கர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கேள்விகளாக மக்கள் முன் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x