

நெல்லை
கோவில்பட்டி அருகே போலீஸாரைத் தாக்கியதாக சுடப்பட்ட ரவுடி மாணிக்கராஜா, போலீஸாரே பிளேடில் அறுத்துக்கொண்டு தன் மீது பழி போடுகிறார்கள் எனத் தெரிவித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக கடந்த செப்.25-ம் தேதி (புதன்கிழமை) ரவுடி மாணிக்கராஜா தோட்டத்தி பதுக்கியிருந்த ஆயுதங்களை எடுக்கச் சென்றபோது அவர் போலீஸாரைத் தாக்கியதால் சுடப்பட்டதாகக் காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
இதனையடுத்து ரவுடி மாணிக்கராஜா சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரவுடி மாணிக்கராஜா, "நான் ரவுடியே இல்லை. என்னை இப்படி ஆக்கியதே போலீஸ்தான். நான் யாரையும் தாக்கவில்லை. அவர்களே கைகளில் பிளேடால் காயம் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் மீது என் கைரேகை இருந்தா சொல்லுங்க.
என்னை வேண்டும் என்றேதான் சுட்டார்கள். என்னை அவர்கள் தோட்டத்தில் பார்க்கவில்லை. பஸ் ஸ்டாண்ட் அருகே நானும் என் மச்சானும் நின்றபோதே பார்த்தார்கள். பின்னர் அங்கிருந்து என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று சுட்டார்கள். எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது" என்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதோடு போலீஸாரின் போலி என்கவுன்ட்டர் முயற்சி என்ற விமர்சனத்துக்கும் உள்ளாகிவருகிறது.
மாணிக்கராஜா சுடப்பட்டதன் பின்னணி என்ன?
கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாணிக்கராஜா (39 ). இவர் மீது கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள், கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 56 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த ஜூலை 21-ம் தேதி போலி பட்டாசு ஆலை நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரை அடுத்த கார்த்திகைபட்டியில் உள்ள மாணிக்கராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி துணை காவல் கோட்டத்துக்கு உட்பட்ட சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான குழுவினர் (புதன்கிழமை) மாலை கார்த்திகைப்பட்டியில் உள்ள தோட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இடது ரவுடி மாணிக்கராஜா, வலது காயமடைந்த காவலர்
அப்போது அங்கு மறைந்திருந்த மாணிக்கராஜா, போலீஸாரை ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் போலீஸ்காரர்கள் செல்வகுமார் (27), முகமது மைதீன் (28) ஆகியோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து தற்காப்புக்காக ரவுடியை காலுக்கு கீழே சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
எஸ்.கோமதிவிநாயகம்