Published : 27 Sep 2019 07:49 AM
Last Updated : 27 Sep 2019 07:49 AM

பெண் கொடூர கொலை வழக்கில் தீர்ப்பு; இளைஞருக்கு தூக்கு தண்டனை: கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

கோவை

பெண்ணை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி சூட் கேஸில் அடைத்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ள கோவை நீதிமன்றம், இவ்வழக்கை திறம்பட விசாரித்த புலனாய்வு அதிகாரிக்கு விருது வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தவர் சரோஜினி (54). இவரது எதிர்வீட்டில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த யாசர் அராபத் (30) வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். கடந்த 2013 பிப்.13-ம் தேதி முதல் சரோஜினியை காணவில்லை. பிப்.21-ம் தேதி எதிர்வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார், வீட்டை திறந்து பார்த்தபோது 2 சூட்கேஸ்களில் 7 துண்டுகளாக கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், சரோஜினியின் மூக்குத்தி, கம்மல்கள் இருந்தன. கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகையை காணவில்லை. தொடை பகுதியை சூட்கேஸில் அடைக்க முடியாததால் சிமென்ட் பூசி பிளாஸ்டிக் பைகளில் பரண் மீது வைக்கப்பட்டிருந்தன.

வீட்டில் குடியிருந்த யாசர் அராபத்தை காணவில்லை. விசாரணையில், பிப்.13-ம் தேதியே சரோஜினியை கொன்று துண்டு துண்டாக சூட்கேஸ்களில் யாசர் அராபத் அடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான யாசர் அராபத்தை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். பின்னர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்த யாசர் அராபத்தை 2013 மார்ச் 2-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையின்போது, “நகைக் காக சரோஜினியை கொலை செய்தேன். சடலத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே, கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேஸ்களில் அடைத்து, வெளியே எடுத்து சென்றுவிடலாம் என நினைத்தேன். ஆனால், ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொண்டு செல்ல முடியவில்லை” என்று அராபத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசா ரணை முடிந்த நிலையில், நேற்று மாலை தீர்ப்பு அளிக்கப்பட்டது. யாசர் அராபத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அரிதினும் அரிதான வழக்கு

பின்னர், நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் அளித்த தீர்ப்பில், “ஒரு பெண் என்றும் பாராமல் கொடூர மாக கொலை செய்து 6 நாட்கள் மறைத்து வைத்தது மட்டுமின்றி, அதன் பிறகான குற்றவாளியின் நட வடிக்கைகளை பார்த்து, இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக் காகக் கருதி, கொலை செய்ததற் காக உயிர்போகும் வரை தூக்கிலிட வும், தடயத்தை மறைத்ததற்கும், நகைகளை திருடியதற்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக் கிறேன்” என்று உத்தரவிட்டார்.

புலனாய்வு விசாரணை அதிகாரிக்கு விருது வழங்க நீதிபதி பரிந்துரை

தீர்ப்பின் முடிவில், “ஒரு எறும்புகூட உயிரிழக்கக்கூடாது என கருதுபவன் நான். ஆனால், பொதுமக்களின் நன்மைக்காக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், வழக்கை திறம்பட விசாரித்த வழக்கின் புலனாய்வு அதிகாரிக்கு விருது வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கிறேன்” என்று நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.

இந்த வழக்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சி.சந்திரசேகர் விசாரித்தார். தற்போது இவர் கோவை மாநகர மத்திய உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆணையராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x