

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் தென்காசி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த நிலையில் மேலும் மூவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெற்கு தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அபிமன்யூ என்ற திலீப் (19). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார்.
இவர் கடந்த 23-ம் தேதி மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றபோது, செய்துங்கநல்லூர்-சிவந்திபட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே வைத்து 3 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.
சந்தையடியூர் கோயில் கணக்கு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதே ஊரைச் சேர்ந்த சப்பாணி மகன் குமார் (40), அவரது தம்பி காமராஜ் என்ற ஆனந்தராஜ் (30) மற்றும் சிலர் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்த நிலையில் குமார் மற்றும் காமராஜ் என்ற ஆனந்தராஜ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியைச் சேர்ந்த ரத்தினபாண்டியன் மகன் மகேஷ் என்ற மாணிக்கம் (27) என்பவர் நேற்று (புதன்கிழமை) தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார்.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தநிலையில் ஆண்ட்ரூ, வினோத் மற்றும் அனிஸ் ஆகியோரும் தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.