

கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே போலீஸாரைத் தாக்கிய ரவுடி சுடப்பட்டார். சிகிச்சைக்காக அவர் தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாணிக்கராஜா (39 ). இவர் மீது கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள், கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 56 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த ஜூலை 21-ம் தேதி போலி பட்டாசு ஆலை நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரை அடுத்த கார்த்திகைபட்டியில் உள்ள மாணிக்கராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவில்பட்டி துணை காவல் கோட்டத்துக்கு உட்பட்ட சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் காவலர்கள் அருண்குமார் செந்தில்குமார் செல்வகுமார் முகமது மைதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று(புதன்கிழமை) மாலை கார்த்திகைப்பட்டியில் உள்ள தோட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த மாணிக்கராஜா, போலீஸாரை ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் போலீஸ்காரர்கள் செல்வகுமார் (27), முகமது மைதீன் (28) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணிக்கராஜாவின் வலது காலுக்கு கீழ் சுட்டுள்ளார்.
இதில் காயமடைந்த மாணிக்கராஜாவை போலீஸார் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காயமடைந்த போலீஸார் செல்வகுமார் மற்றும் முகமது மைதீன் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- எஸ்.கோமதிவிநாயகம்