

சென்னை
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்து பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர் பாக அரசு ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை காசிமேடு சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி(35). இவரின் மனைவி சரண்யா(30). பேராசிரியரான கார்த்தி, எம்.கே.பி. நகரைச் சேர்ந்த வேலாயுதம்(42) என்பவரிடம், அரசு கல்லூரியில் வேலைக்கு சேர்வதற்கு ரூ.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் வேலாயுதம் அவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், விரக்தி யடைந்த கார்த்தி, தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அடிக்கடி பணம் கேட்டு வந்தது வேலாயுதத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்களன்று முல்லை நகர் பேருந்து நிலையத்தில் வேலாயுதத்தை சந்தித்த கார்த்தியும் அவரது மனைவி சரண்யாவும் பணம் குறித்து பேசியுள்ளனர்.
அப்போது வேலாயுதம் தான் சாய்பாபா கோயிலுக்குச் சென்று விட்டு வந்ததாகக் கூறி, ஒரு பொடியை பிரசாதமாக இருவரிட மும் கொடுத்து அதை சாப்பிடும் படி கூறினாராம். அந்த பொடியை சாப்பிட்ட கார்த்தியும் சரண்யாவும் மயங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அங்கிருந்து வேலாயுதம் நழுவிச் சென்று விட்டார். அங்கிருந்த பொதுமக்கள் மயங்கி விழுந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் கார்த்தி இறந்துள்ளார். சரண்யா, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், வேலாயுதம் கொடுத்தது சல்ஃபியூரிக் என்ற வேதி பொருள் என்பதும் இது விஷத்தன்மை கொண்டது என்பதும் தெரிய வந்தது. இதை பிரசாதத்தில் கலந்து கொடுத்தையும் போலீஸார் கண்டுபிடித்தனர். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு தொடர்ந்து தொல்லை செய்ததால் கார்த்தியை கொலை செய்யும் நோக்கத்துடன் வேலாயுதம் அதை கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், தலைமறைவாக இருந்த வேலாயுதத்தை நேற்று கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து 250 கிராம் சல்ஃபியூரிக் வேதி விஷப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "வேலாயுதம் கிண்டி யில் உள்ள உணவு பாதுகாப்பு கழகத்தில் உதவியாளராக பணி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. தன்னிடம் கொடுத்த பணத்தை கார்த்தி திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் அவரை கொல்லும் நோக்கத்துடன் வேலாயுதம் விஷம் கலந்த பிரசாதத்தை கார்த்திக்கு கொடுத்துள்ளார். இதையே அவர் தங்களிடமும் தெரிவித்துள்ளார். இதேபோல் இவர் வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்" என்றனர்.