

விருதுநகர்
விருதுநகரில் குடிபோதையில் லாரி ஓட்டிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநருக்கு ரூ.10,750 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களுக்குமுன் சூலக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் போலீஸார் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, விருதுநகரிலிருந்து சாத்தூர் நோக்கி வேகமாகச் சென்ற கண்டெய்னர் லாரியை நிறுத்தியுள்ளனர். ஆனால், லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாகச் சென்றுள்ளார்.
அதையடுத்து, வாக்கி டாக்கி மூலம் சூலக்கரை மேட்டில் உள்ள போலீஸாருக்கு தகவல் தெரிவித்த சூலக்கரை போலீஸார் தொடர்ந்து லாரியை துரத்திச்சென்று பேரிகேட்டுகளை சாலையில் வைத்து லாரியைப் பிடித்தனர்.
ஆனால், லாரியில் வந்த ஓட்டுநர் உள்ளிட்ட இருவரும் தப்பியோடினர். அதையடுத்து, கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து போலீஸார் காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
விசாரணையில், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தது கேரள மாநிலம் கோழிக்கோடு குன்னும்மாள்தடை ஹவுஸைச் சேர்ந்த சாருக்தையல்தோடி (24) என்பதும், அவருடன் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சாகுல்ஹமீது (25) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீஸாருக்குப் பயந்து தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
அதையடுத்து, குடிபோதையில் கண்டெய்னர் லாரி ஓட்டிவந்த சாருக்தையில்தோடிக்கு ரூ.10,750 அபராதமும், லாரியை நிறுத்தாமல் தப்பியோடத் தூண்டிய சாகுல்அமீதுக்கு ரூ.250ம் அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருவரும் இன்று அபராதத் தொகையைச் செலுத்திச்சென்றனர்.