சீறிப் பாயும் நீரோட்டத்தில் டிக் டாக்: விபரீத முயற்சியால் உயிரைப் பறிகொடுத்த தெலங்கானா இளைஞர் 

சீறிப் பாயும் நீரோட்டத்தில் டிக் டாக்: விபரீத முயற்சியால் உயிரைப் பறிகொடுத்த தெலங்கானா இளைஞர் 
Updated on
1 min read

தெலங்கானா

தெலங்கானா மாநிலம் கோனுகொப்புலாவைச் சேர்ந்த இந்திரகுமார்(22) என்ற இளைஞர் தடுப்பணையில் டிக் டாக் செய்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரின் சடலம் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் டிக்டாக் செய்யும் விபரீத முயற்சியில் 22 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் வேலைபார்த்துவந்த இந்திரகுமார் அண்மையில் தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்துள்ளார். விடுமுறைக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம் மற்றவர்களுக்கு படிப்பினையாக மாறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தினேஷ்குமார் தனது நண்பர்கள் மனோஜ் கவுட், கங்காசலம் ஆகியோருடன் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பீம்கல் பகுதியிலுள்ள தடுப்பணைக்குச் சென்றுள்ளனர்.

அண்மையில் பெய்த மழை காரணமாக தடுப்பணையில் நீரோட்டம் பலமாக இருந்துள்ளது. இந்நிலையில், தினேஷும் அவரது நண்பர்களும் தடுப்பணையில் இறங்கி விளையாடியுள்ளனர். மீன் பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் டிக்டாக் வீடியோக்களை எடுத்ததாகத் தெரிகிறது.

நீரோட்டத்தின் தீவிரத்தை உணராமல் மூவரும் தடுப்பணையில் இருந்து நீர் வெளியேறும் பகுதிக்கு அருகே சென்றுள்ளனர். அப்போது நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர். தடுப்பணை பகுதியில் உள்ளூர்வாசிகள் நிறைய பேர் இருந்ததால் இளைஞர்களின் கூக்குரல் கேட்டு சிலர் நீரில் குதித்து இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு பேரை மீட்ட நிலையில் தினேஷை மீட்க முடியவில்லை. உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தினேஷின் சடலம் மீட்கப்பட்டது.

டிக்டாக் எடுக்கும் முயற்சியில்தான் இந்திரகுமார் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர் இறப்பதற்கு முன்னர் எடுத்த 2 டிக் டாக் வீடியோக்கள் கிடைத்துள்ளன ஆனால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தருணத்தில் எடுக்கப்பட்டதாக எந்த ஒரு வீடியோவும் கிடைக்கவில்லை என போலீஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில், தினேஷ் நீரில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட அந்த இரண்டு டிக் டாக் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆபத்தான இடங்களில் செல்ஃபி, டிக்டாக் எடுக்க வேண்டாம் என காவல்துறை தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்திவருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in