

சென்னை
நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலக் கொள்ளையர்கள் 8 பேரை இந்தூரில் போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
சென்னை, நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ரமேஷ் (52). இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். ரமேஷ் சொந்தமாக கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். கடந்த வாரம் வேண்டுதலை நிறைவேற்ற சபரிமலைக்குச் சென்றுவிட்டார்.
ரமேஷின் மனைவி உறவினர் வீட்டுக்கு காலையில் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகை, 10 பவுன் வைர நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.1 லட்சம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
நகைகள் திருட்டுப்போனது குறித்து தகவலறிந்து வந்த போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். திருடிய நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அங்குள்ள பொதுமக்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்ததாகப் பலரும் தெரிவித்தனர். அவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள மற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
அதில் வடமாநில நபர்கள் சிலரின் பதிவு கிடைத்துள்ளது. உடனடியாக அந்தப் புகைப்படங்களை வைத்து அனைத்து மாநில போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நகைகளைக் கொள்ளையடித்த நபர்கள் உஜ்ஜயினி அருகே ரயில்வே போலீஸார் உதவியுடன் பிடிபட்டனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்த அவர்கள் உஜ்ஜயினி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்லும் வழியில் ஓடும் ரயிலிலேயே நேற்றிரவு உஜ்ஜயினி போலீஸாரிடம் பிடிபட்டுள்ளனர்.
பிடிபட்டவர்கள் யார் அவர்கள் பெரும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் ரயிலில் கொள்ளையடித்துச் சென்ற வடமாநில கும்பலை சிபிசிஐடி போலீஸார் வெகு சிரமப்பட்டு பிடித்தனர். இதேப்போன்று கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற நாதுராம் கும்பலை ராஜஸ்தான் சென்று பிடிக்கும் முயற்சியில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உயிரையே விலையாகத் தரவேண்டி இருந்தது.
வடமாநிலக் கொள்ளையர்கள் வேலைதேடி வருவதுபோன்று தமிழகத்துக்குள் ஊடுருவி கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்வது வாடிக்கையாகி வருகிறது.