Published : 21 Sep 2019 12:10 PM
Last Updated : 21 Sep 2019 12:10 PM

'அன்சருல்லா' இயக்கத் தொடர்பு?- நெல்லையில் என்ஐஏ திடீர் சோதனை

நெல்லை

நெல்லையில் என்ஐஏ அதிகாரிகள் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அன்சருல்லா இயக்க வழக்கை விசாரித்து வருவதன் தொடர்ச்சியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்களைக் கண்காணிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் நடவடிக்கை எடுத்தது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 14 பேரை விசாரித்தபோது அவர்கள் வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட இயக்கங்கள் துணையுடன் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவுக்கும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தவும், அதற்கு ஆட்களைத் திரட்டவும், நிதி திரட்டவும் பயிற்சி பெற்று கூட்டாகச் செயல்படுவதாகத் தெரியவந்தது.

அவர்களது இயக்கத்துக்கு ‘அன்சருல்லா’ என்கிற பெயரிட்டு செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ‘அன்சருல்லா’ என்கிற இயக்கத்தின் பெயரில் இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக 14 தமிழர்களை ஐக்கிய அரபு அமீரகம் கைது செய்து சிறையில் அடைத்தது. இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கு அளித்தது. பின்னர் அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியது. அவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தமிழகத்திலும் மேலும் இருவரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20-ம் தேதி நாகப்பட்டினம், சென்னை, கீழக்கரை, மேலப்பாளையம், திருவாரூர், மதுரை ஆகிய பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளி உள்ள திவான் முஜிபூர் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம்வெள்ளாங்குளியைச் சேர்ந்தவர் திவான் முஜிபூர். இவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திவான் முஜிபூர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வளைகுடா நாடான துபாயில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அங்கு வேலையில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த அவர் நெல்லையிலேயே வசித்து வருகிறார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில் திவான் முஜிபுர் வீட்டில் இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் 4 பேர் சோதனை நடத்தினர். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்த போது இதர தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தாரா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றர்.

மேலும் திவான் முஜிபூருக்குச் சொந்தமான புளியங்குடியில் உள்ள வீடு மற்றும் அவரது பெயின்ட் கடையிலும் சோதனை நடக்கிறது. திவான் முஜிபுர், மைதீன் இருவரும் உறவினர்கள். இருவரும் சேர்ந்து பெயின்ட் கடை நடத்தி வருகின்றனர். திவான் முஜிபுர் வீட்டில் காலை 11 மணியளவில் சோதனை முடிவடைந்தது. திவான் முஜிபுரை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அன்சருல்லா இயக்கம் :

தமிழ்நாடு ‘அன்சருல்லா’ வழக்கு கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி என்ஐஏவால் பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 120B, 121A, 122 ஐபிசி மற்றும் உட்பிரிவுகள் 17,18,18b, 38 மற்றும் 39 of UA(P) Act படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மிக முக்கியமான, நம்பகமான ரகசியத் தகவலின் பேரில் இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியிலும் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ்/டாயிஷ், அல்கொய்தா மற்றும் சிமி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் சேர்ந்து இந்தியாவுக்குள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் குழுவாக இயங்க முடிவெடுத்துள்ளது தெரியவந்தது.

அந்தக் குழுவுக்கு ‘அன்சருல்லா’ என பெயர் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அன்சருல்லா இயக்கம் மூலம் இந்தியாவுக்குள் பிரிவினைவாத, தீவிரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டவும், மேற்கண்ட செயல்களில் ஈடுபடவும், வெடிகுண்டு, கத்தி, வாகனங்கள் மூலம் பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

தங்கள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பிரிவினையைத் தூண்டும் வீடியோக்கள் மற்றும் ஜிகாதி பிரசுரங்களை பிரசுரிப்பதன் மூலம் ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பேரில் கடந்த ஜூலை 13 -ம் தேதி என்ஐஏ 9 பேரை இந்த வழக்கில் கைது செய்தது. ஜூலை.13-ம் தேதி மேலும் 7 பேரைக் கைது செய்தது.

கடந்த ஜூலை 19-ம் தேதி அவர்களை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் என்ஐஏ நடத்திய தீவிர விசாரணையில் விசாரணையை அடுத்து தற்போது நெல்லையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக என்ஐஏ தரப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x