

சென்னை
மின்வாரிய அலட்சியம் காரணமாக நேற்றும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குட்டி நாய்களுக்காக உணவளிக்க வீட்டை விட்டு வெளியே வந்த இளைஞர் மீது மின்கம்பம் உடைந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் சாரங்கன் அவென்யூவில் உள்ள கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேது(42). அதே பகுதிதில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார்.
இவர் வசிக்கும் வீட்டு வாசலில் நாய் ஒன்று குட்டிப்போட்டிருந்தது. பணிக்கு போகும்போதும் வரும்போதும் அதற்கு உணவளிப்பது விளையாடுவது என இருந்துள்ளார். நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு இரவு உணவு உண்டப்பின்னர் மீதமுள்ள உணவை வீட்டிற்கு வெளியே குட்டியுடன் இருக்கும் தெரு நாய்க்கு வைப்பதற்காக எடுத்துச் சென்றார்.
அவரது வீட்டு வாசல் வழியாக மின் கம்பி மின்கம்பம் வழியாக செல்கிறது. அதில் சேதமடைந்த சிமெண்ட் மின் கம்பம் திடீரென உடைந்து மின்கம்பி கீழே சாய்ந்தது. மின் கம்பம் சாய்ந்ததால் உயர் அழுத்த மின்சார வயர்கள் சாலையில் விழுந்தது. அப்போது நாய்க்கு உணவளிக்கச் சென்ற சேதுராமன்மீது மின்சார வயர்கள் விழுந்து மூடியது. இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இவை அனைத்தும் சில நொடிகளுக்குள் நடந்துவிட்டது. மின்சாரம் பாய்ந்ததால் சேதுராமன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரது உடல் நிலையைச் சோதித்த மருத்துவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர்.
உடனடியாக கணவர் உயிரைக் காப்பாற்ற அவரது மனைவி 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்ததாகவும், அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தனியார் ஆம்புலன்ஸில் கொண்டுச்செல்ல முயன்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
சேதமடைந்த மின் கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து சேதுராமன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி பொதுமக்கள் அதே நிலையில் அங்கு பல மின்கம்பங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
நேற்று முன்தினம் முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் தீனா உயிரிழந்த நிலையில், மீண்டும் மின்வாரிய அலட்சியத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.