Published : 16 Sep 2019 03:43 PM
Last Updated : 16 Sep 2019 03:43 PM

ஜீவசமாதி அடையப்போவதாக பொதுமக்களிடம் பணம் வசூல்: இருளப்ப சாமி, மகன் உட்பட 7 பேர் மீது வழக்கு

சிவகங்கை

ஜீவ சமாதி அடையப்போவதாக விளம்பரப்படுத்தி பொதுமக்களை வரவழைத்து பண வசூலில் ஈடுபட்டதாக சிவகங்கை இருளப்ப சாமி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை அருகே பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பன். திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். தன்னை சிவபக்தர் என்று கூறிக்கொள்ளும் இருளப்பன், திடீரென காணாமல் போனார் பின்னர் ஊர் திரும்பிய அவர் குறி சொல்வது, ஜாதகம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து அக்கம் பக்கம் கிராமத்தில் சாமியாராக பிரபலமானார்.

சாமியார் இருளப்பசாமி, கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு முதல் காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாக 10 நாள்களுக்கு முன்பு அறிவித்தார். இந்தச்செய்தி தீயாக பரவியது. வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலானது.

கடந்த 10 நாட்களாக தண்ணீர் மட்டுமே அருந்தி ஜீவசமாதி நிலைக்கு அவர் தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைப்படித்த பலரும் பல ஊர்களிலிருந்து வண்டிக்கட்டிக்கொண்டு சாமியாரின் ஜீவ சமாதியை காணவும், ஆசிர்வாதம் வாங்கவும் திரண்டு வந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஊடகங்களில் தகவல் பரவியது காரணமாக கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. நீண்ட வரிசையில் காத்திருந்து இருளப்பனை வணங்குவதும் அருள்வாக்கு பெற்றுச் செல்வதுமாக இருந்தனர். இருளப்பன் தேர்வு செய்த இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு ஜீவ சமாதிக்காக 10-க்கு 10 அடி பள்ளமும் தோண்டப்பட்டது.

ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்த வியாழக்கிழமை இரவு, பாசாங்கரை கிராமத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்ததால் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருளப்பனை காணவந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் விநியோகம் நடந்தது. உண்டியல் வைத்து காணிக்கை பணமும் வசூலிக்கப்பட்டது.

மருத்துவர் குழு இருளப்பனின் உடல்நிலையை பரிசோதித்த வண்ணம் இருந்தனர். மாவட்ட ஆட்சியரே நேரில் வந்துவிட்டார். ஆனால் சொன்னப்படி காலை 5 மணிக்கு அவரால் ஜீவ சமாதி அடைய முடியவில்லை. தனது ஜீவ சமாதியை இன்னொரு நாளுக்கு தள்ளி வைத்துவிட்டதாக கூறிய இருளப்ப சாமியார் அறிவித்து தூங்க சென்றுவிட்டார்.

சாமியார் தான் பிரபலமடைவதற்காக ஜீவசமாதி அடையப் போவதாக பொது மக்களை ஏமாற்றியுள்ளார், சாமியார், அவரது மகன் கண்ணப்பன் உள்ளிட்ட சில அப்பாவி பொதுமக்களிடம் உண்டியல் மூலம் காணிக்கை என்கிற பெயரில் பணம் வசூல் செய்துள்ளனர் என அவ்வூர் மக்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜீவசமாதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி, உண்டியல் வசூலித்ததாக சாமியார் இருளப்பசாமி, அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x