

மதுரை
போலீஸாரை வீடியோ எடுத்து காவல்துறையை அவதூறு செய்யும் வகையிலும், மிரட்டும் வகையிலும் பாட்டுப்பாடி டிக்டாக்கில் வீடொயோ வெளியிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து மேலும் 2 நபர்களை தேடி வருகின்றனர்.
நேற்று தியாகி இம்மானுவேல் குருபூஜை நடைபெற்றது. இதற்காக காரியாபட்டி அருகே கே.கரிசல்குளம் கிராமத்திலிருந்து தியாகி இம்மானுவேல் குருபூஜைக்கு அரசு பேருந்தில் சென்றவர்களுக்கு பாதுகாப்புக்காக இரண்டு போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீஸாரை ஒரு கும்பல் பாட்டுப்பாடி போலீஸை தரக்குறைவாகவும், போலீஸாரை வெட்டுவோம் குத்துவோம் என வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை டிக்டாக்கில் போட்டுள்ளனர். இந்த வீடியோ டிக்டாக்கில் வைரலானது. போலீஸாரை மிரட்டும்விதமாகவும், தரக்குறைவாகவும் பேசி மிரட்டி காணொலி வெளியிட்டது குறித்து பலரும் போலீஸாரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்புக்குச் சென்ற போலீஸாரில் ஒருவரான முத்துக்குமார் என்பவர் இதுகுறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸாரை அவதூறாக டிக்டாக்கில் பதிவிட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அவ்வாறு டிக்டாக் வீடியோ வெளியிட்டது, கே.கரிசல்குளத்தை சேர்ந்த வினித் (21), சந்தோஷ்ராஜா (19 ), கள்ளிக்குடி ஒன்றியம் வேப்பங்குளத்தை சேர்ந்த மருதுசெல்வம் (20), ராமகிருஷ்னமூர்த்தி(20), உள்ளிட்ட 6 பேர் என தெரியவந்தது. ஆறு பேர் மீதும் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.
வினித், சந்தோஷ்ராஜா உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார், மற்றும் டிக் டாக் செய்த மோகன்ராஜ் இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இருரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.