Published : 11 Sep 2019 03:25 PM
Last Updated : 11 Sep 2019 03:25 PM

மயிலாப்பூர் கோயிலில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை திருட்டு: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிச் சென்றவர் குறித்து போலீஸ் விசாரணை

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் 125 ஆண்டுகள் பழமையான துர்க்கை அம்மன் கோயிலில் பூஜை நேர கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஐம்பொன்னாலான கிருஷ்ணர் சிலை திருடப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவில் துர்க்கையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 125 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்தக் கோயிலுக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் விலை உயர்ந்த ஐம்பொன்னாலான கிருஷ்ணர் சிலை ஒன்றை பெண் பக்தர் ஒருவர் அளித்திருந்தார். அது கோயில் வளாகத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது.

தனியார் அறங்காவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் இக்கோயிலில் நேற்று மாலை ராகு கால பூஜை நடைபெற்றது. அப்போது பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூஜை முடிந்த பின்னர் கூட்டம் கலைந்த பின் பார்த்தபோது, கோயில் வளாகத்தில் இருந்த ஐம்பொன்னாலான கிருஷ்ணர் சிலை காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து கோயில் அர்ச்சகர் சங்கர் அளித்த தகவலின் பேரில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவா மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற மயிலாப்பூர் போலீஸார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

சிலை திருட்டுப்போன கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் சிலையை திருடிச் சென்றது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் கோயிலுக்கு அருகில் உள்ள நிறுவனங்கள், முக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் கைரேகை ஏதும் உள்ளதா எனவும் போலீஸார் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்காக பக்தர் ஒருவரால் கொடுக்கப்பட்ட சிலையின் அப்போதைய மதிப்பு 35 ஆயிரம் என கோயில் நிர்வாகி தெரிவித்தார்.

நெரிசல் மிகுந்த பூஜைவேளையில் பக்தர் போர்வையில் சிலை திருடிச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x