Published : 10 Sep 2019 02:19 PM
Last Updated : 10 Sep 2019 02:19 PM

பப்ஜி விளையாட முட்டுக்கட்டை - தந்தையை கொலை செய்த மகன் கைது

பெங்களூரு

பப்ஜி விளையாட முட்டுக்கட்டை போட்ட தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் ‘கொசுசன் டாகாமி’ எழுதிய ‘பேட்டில் ராய்லி’என்ற நாவலைத் தழுவி பப்ஜி(PUBG-Player Unknown BattleGround) என்ற இணையதள விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 100 நபர்கள் ஒரு தீவில் இறக்கிவிடப்படுவார்கள். அந்தத் தீவில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி கடைசிவரை யார் உயிருடன் உள்ளனரோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.

2017-ம் ஆண்டு அறிமுகமான பப்ஜி இப்போது உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள விளையாட்டாகத் திகழ்கிறது.

பிரபலமான இந்த ஸ்மார்ட் போன் விளையாட்டு மாணவர்களின் நடத்தை, மனநிலை, படிப்பு, அவர்கள் பயன்படுத்தும் மொழி எல்லாவற்றையும் பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. குழந்தைகளிடையே வன்முறை நடத்தைகளையும் உருவாக்குவதாக தெரியவந்ததால் நாட்டின் சில நகரங்களில் இவ்விளையாட்டு போலீஸாரால் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் பப்ஜி விளையாட்டின் தீவிரத்தால் அதில் தோற்றதை தாங்கமுடியாமல் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சிறிது காலம் ஓய்ந்திருந்த இந்த பப்ஜி பரபரப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலாகவியைச் சேர்ந்தவர் ஷங்கரப்பா (62). ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான இவர் தனது மனைவி மற்றும் மகன் ரகுவீர் (21) உடன் வசித்து வருகிறார். டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த ரகுவீர் ஒரு தீவிர பப்ஜி பிரியர்.
விளையாட்டாக ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் காலநேரம் போவது தெரியாமல் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்.

மகன் வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் செல்போனே கதி என்று கிடப்பதை கண்ட ஷங்கரப்பா அவரை கண்டித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பப்ஜியில் மூழ்கியுள்ளார் ரகுவீர். ஒரு கட்டத்தில் மொபைலில் இண்டெர்நெட் டேட்டா தீர்ந்துவிட்டதால் தொடர்ந்து அவரால் விளையாட முடியாமல் போனது.

தனது தந்தை ஷங்கரப்பாவிடம் சென்று இண்டெர்நெட் ரீசார்ஜ் செய்ய பணம் தரும்படி கேட்டுள்ளார். ஷங்கரப்பா பணம் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் தனது தாயை கீழ தள்ளிவிட்ட ரகுவீர் வேகமாக அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

கடும் கோபத்தில் இருந்த ரகுவீர் இரவு தாய் தந்தை இருவரும் உறங்குவதை உறுதி செய்துவிட்டு, பின்னர் மெதுவாக தனது அறையை விட்டு வெளியே வந்துள்ளார். நேராக கிச்சனுக்கு சென்ற அவர் தேங்காய் உடைக்கப் பயன்படுத்தும் பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு தனது பெற்றோர் உறங்கும் அறைக்கு சென்றுள்ளார்.

வேகமாக உள்ளே சென்றவர் நேராக உறங்கிக் கொண்டிருந்த தனது தந்தையின் மீது பாய்ந்து சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார். கழுத்து, கை, கால் பகுதிகளில் பயங்கர காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷங்கரப்பாவைக் கண்டு அவரது மனைவி அலறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரகுவீரை கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷங்கரப்பாவை ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரகுவீர் ஐபிசி 302-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x